நூற்றுக்கு மேற்பட்ட வைத்தியர்கள், பொறியியலாளர்களை உருவாக்கிய பெருமையுடன் 37 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபர் திரு. மீரா மொகிதீன்..!
அதிபர் திரு. மீரா மொகிதீன் தனது கல்விப் பணியிலிருந்து இன்று 21 ஜுலை மாதம் ஓய்வு பெறுகின்றார்.
ஹட்டன் வலயத்திலுள்ள கார்ட்மோர் தமிழ் வித்தியாலயம் , மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலயம், நல்லத்தண்ணீர் தமிழ் மகா வித்தியாலயம், குயீன்ஸ்லேன் தமிழ் வித்தியாலயம், மஸ்கெலிய சென் ஜோஸப்ஸ் கல்லூரி, பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் விஞ்ஞான ஆசிரியராகவும், பகுதித் தலைவராகவும், பிரதி அதிபராகவும் பணியாற்றி பின்னர் கொத்மலை வலயத்தில் உள்ள சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராகவும், பொல்வத்துர முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராகவும் சேவையாற்றி இன்றுடன் தனது பணியிலிருந்து திரு. மீரா மொகிதீன் ஓய்வு பெறுகின்றார்.
மஸ்கெலியா பிரதேசத்தில் கடமையாற்றிய பொழுது தான் கற்பித்த விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்
பெற ஆக்கமும், ஊக்கமும் காட்டிய இவரது பணிகளை எக்காலத்திலும் அவரிடம் கற்ற மாணவர்கள் பெருமிதமாக பேசுவது அவதானிக்கத்தக்கது.
இவரது மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளிலும் பிரசித்தி பெற்று விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.
மனித நேயம், முற்போக்கான சிந்தனை, மாணவர்கள் நலன் கருதிய கரிசனை, நற்பண்பு மிக்க இவரது ஆளுமையானது தொடர்ந்து சமூக நலன் மிக்கதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இவரது பணி ஓய்வுக் காலம் சிறப்புற அமைவதோடு , நோய் நொடியற்ற தீர்க்க ஆயுளுடன் வாழ மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
(பேராசிரியர். டாக்டர். ஜியாவுல் ஹசன் ஏ ஆர் எம்)











