பேருவளை நகர சபைத் தலைவருக்கு மகத்தான வரவேற்பு..!
பேருவளை நகர சபையின் புதிய தலைவர் மபாஸிம் அஸாஹிருக்கு பேருவளைப் பகுதியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
நகர சபையிலிருந்து ஆதரவாளர்கள் மலர் மாலை அணிவித்து காலி வீதியூடாக பேருவளை நகர பிரதான பஸ் நிலையம் வரை ஊர்வளமாக அழைத்துச் சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், உலமாக்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், ஆதரவாளர்கள் புதிய நகர பிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
ஆதரவாளர்கள் நகரெங்கும் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திம ஹெட்டியாராச்சி, தேசிய மக்கள் சக்தி பேருவளை அமைப்பாளர் ரம்ஸான் சிஹாப்தீன், தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத், பேருவளை நகர சபை முன்னால் தலைவரும் தற்போதைய அறுப்பினருமான அல்ஹாஜ் மஸாஹிம் முஹம்மத், புதிய உப தலைவர் விமலசிறி சில்வா, உட்பட உறுப்பினர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றினர்.
நகர பிதா மபாஸிம் அஸாஹிர் பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீலின் இல்லத்திற்கு சென்று அவருடன் சினேகபூர்வ கலந்துரையாடளில் ஈடுபட்டார்.
நகர சபை புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின் வீடு சென்ற அவரை அன்னாரின் தகப்பனார் முஹம்மத் அஸாஹிர், புதல்வி ஆகியோர் மலர் மாலை அணிவித்து முஸாபஹா செய்து வரவேற்றமையும் இங்கு விசேட அம்சமாகும்.
இந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய நகர பிதா பேருவளை மக்களுக்கு சிறப்பான சேவையை பெற்றுக் கொடுப்பதோடு ஊழல், லஞ்சம், அதிகார து~;பிரயோகம் இல்லாத நிர்வாகத்தை முன்னெடுப்பேன்.
பேருவளை நகர சபை பகுதியில் வாழும் மூவின மக்களுக்கும் இன, மத, மொழி, பிரதேச மற்றும் கட்சி பேதமின்றி நீதியாகவும், நேர்மையாகவும் தியாகத்துடனும் சேவை செய்து இந்த மண்ணின் கண்ணியத்தையும் பாதுகாப்பேன் என்றார்.
நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த சபைக்கு தெரிவான 16 உறுப்பினர்களினதும் முழுமையான பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றேன்.
மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்து பேருவளை நகர சபை பகுதியை துரிதமாக கட்டியெழுப்புவேன் என்றார்.
(பேருவளை பீ.எம். முக்தார்)


