உள்நாடு

கடும் பொருளாதார நெருக்கடியில் விடுதலையான சுஹைலின் குடும்பம்; உதவுமாறு வேண்டுகிறார் மனித உரிமை ஆணைக்குழு செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான்

நியாயமான காரணங்கள் எதுவும் இன்றி 9 மாதங்களாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஹெம்மாத்தகம யை சேர்ந்த சுகைல் ரிபாய் உடைய குடும்பம் இந்த கைது காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

9 மாத காலமாக கொழும்புக்கு வந்து தன் மகனைப் பார்ப்பதற்கு மற்றும் சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கு என பல இலட்சம் ரூபாக்களை இவர்கள் செலவு செய்திருக்கின்றார்கள். ஒரு சாதாரண கூலித் தொழிலாளியான இவர் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று, அதற்கான வட்டியைச் செலுத்தி வருவதாகவும் அவருடைய குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

இவருடைய இந்தப் பரிதாப நிலையைப் போக்குவதற்கு உதவி செய்யுமாறு சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாட்டாளர் முஹீர் ஜீரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே நேரம் சுகைல் எந்தவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லையென கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து அவர் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் முன்னிலையில் இவர் கடந்த 15ம் திகதி ஆஜர் செய்யப்பட்டார்.

இவரைப் பிணையில் விடுவித்ததோடு இவருடைய அடுத்த வழக்கு செப்டம்பர் 16ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16ம் திகதி இவரை முழுமையாக விடுவிப்பதற்காக சகல நடவடிக்கைகளிலும், இவருடைய விடுவிப்பில் முக்கிய பங்காற்றிய தெகிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் அர்கம் முனீர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே நேரம் சட்ட விரோதமாக இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மனித உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கு சில சமூக நல அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் மாதம் இவர் கைது செய்யப்பட்ட போது இவரை விடுவிப்பதற்காக பொலீசார் தன்னிடம் 5000 ரூபாய் கேட்டதாக சுகைல் குற்றம் தெரிவித்துள்ளார்.
விமான போக்குவரத்து துறையில் கல்வி கற்று வரும் சுகைல் விடுதி ஒன்றில் சேர்வதற்காகவே அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார்.

45 வயது மதிக்கத்தக்க பொலீஸ் அதிகாரி ஒருவர் 5000 ரூபாய் பணம் தந்தால் இப்போதே உன்னை விடுவிப்பேன் என இலஞ்சம் கோரியுள்ளதாக இவர் குற்றம் சுமத்தியுள்ளார். அப்போது தன்னிடம் பணம் இருக்கவில்லை எனவும் 2000 ரூபாய் பணத்தையே தான் எடுத்து வந்திருப்பதாகவும் செலவுகள் போக அந்த இடத்தில் ஆயிரம் ரூபாயுடன் நின்றிருப்பதாகவும் கூறிய சுகைல், தான் அந்த மிகுதிப் பணத்தினை பொலீசாரிடம் கொடுப்பதாக கூறிய போதும் அந்த அதிகாரி தன்னை பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறைப்படுத்தியதாகவும் சுகைல் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுமா என்பதும் அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் வினவப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் லலிந்த ஜயதிஸ்ஸ பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக ஒரு விஷேட குழு நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதும் பயங்கரவாதத்திற்கு எதிரான புதியதொரு சட்டம் இயற்றப்படும் எனவும் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் எனவும் அமைச்சரவையில் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிராக எமது கட்சி எடுத்திருக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதில் எவரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தை எங்காவது பொலீசார் முறைகேடாக பயன்படுத்தினால் அதற்கு எதிராக பொதுமக்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம் எனவும் அமைச்சர் லலிந்த மேலும் தெரிவித்தார்.

Suhail’s Father Rifai
Mobile:+94 78 323 7569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *