உள்நாடு

பொத்துவில் சபாத் இல்லத்தை அகற்ற ஏகமனதான தீர்மானம்

பொத்துவில்-அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாயலுக்கு அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தொடர்பான பிரச்சினை, நேற்று (17.07.2025) அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முக்கிய விவாதமாக மாறியது.

இப்பிரேரணை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த ‘சபாத் இல்லம்’ எதிர்காலத்தில் சமூக இடைவெளி, மதச்சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை விளக்கிக் கூறினார். பொத்துவில் பகுதியில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தற்போது உயர் பாதுகாப்பு வலயமாக மாறி, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொத்துவில் மக்களின் தகவலின்படி, இந்த இடத்திற்கு பாதுகாப்பு பிரிவினரால் அதிகளவிலான பாதுகாப்பு வழங்கப்படுவதால், மாணவர் சமூகம், மீனவர் சமூகத்தினர், விவசாயிகள், பிரதேசவாசிகள் மற்றும் ஏனைய நாட்டிலிருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ‘சபாத் இல்லம்’ சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டதா? என்பதை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தவிசாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் பதிலளிக்கும்போது,

இது இலங்கையின் கம்பனிச் சட்டத்தின் கீழ் கொழும்பு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பொத்துவில் பிரதேசத்தில் அமைப்பதற்கான சட்ட அனுமதி எதுவும் பெறப்படவில்லை ” என உறுதிப்படுத்தப்பட்டது.

இது பிரதேச சபையின் விதிமுறைகளுக்கும், செயலகத்தின் அனுமதிகளுக்கும் முரணான செயல் என்பதுடன், சட்டத்திற்கு புறம்பானதாகவே பார்க்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொத்துவில் பிரதேசத்தில் அனுமதியில்லாமல் இயங்கிவருவதாக கூறப்படும் இஸ்ரேலின் நிறுவனம் தொடர்பாக பொது அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள் பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாசித்

இந்த அமைப்பு பொத்துவில் மக்களை மட்டுமல்லாமல், இங்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளையும் அச்சத்திற்குள்ளாக்குகிறது. இதனால் அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் முயற்சிகள் பாதிக்கப்படும். எனவே, உடனடியாக இந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ். எம். எம். முஷாரப் கூறுகையில்,

இது தொடர்பாக பிரதேச சபையில் எதுவிதமான அனுமதியும் பெறப்படவில்லை. இந் நிறுவனம் யார் மூலம், எப்படி இயங்குகிறது என்பதை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும், எமது பிரதேச பாடசாலை மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்ட காணொளிகளை, சில ஊடகங்கள் அதனை இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையாக திருப்பி விளக்கி, இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இதனை சித்தரித்து தமக்கான பாதுகாப்பை அதிகரிக்கச் செய்கின்றனர். இது மிகவும் கவலையளிக்கும் விஷயம்,” என்றார்.

பிரதேச சபையின் உப தவிசாளர் மாபிர் கூறுகையில்,

இந்த அமைப்பு எனது பிரதேசத்தில், ஒரு சமூகத்தின் பள்ளிவாசலுக்கருகில் சட்டப்படி அனுமதியின்றி இயங்குவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது திட்டமிட்ட செயலாக இருக்க வாய்ப்பு உள்ளது. தற்போது இதற்காக வழங்கப்படும் அதிகப்படியான பாதுகாப்பு, மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள் ஆகியோருக்கு அச்சத்தையும் தடையையும் ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.

இதேவேளை, முன்னாள் தவிசாளர் ரஹீம் கூறுகையில்,

இந்த அமைப்பு உரிய பதிவு இல்லாமல், வெளிநாட்டில் இருந்து நேரடியாக கட்டுப்படுத்தப்படுகிறது என தகவல்கள் வெளியாகின்றன. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கின்றனர். இதனால் உள்ளூர் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஹோட்டல் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தினை அகற்றுவதற்கான முடிவை தற்போது எடுக்க வேண்டும்,” என தெரிவித்தார்.

முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ. பி. பதுர்கான் கூறுகையில்,

இந்நிறுவனம் இங்கு அமைக்கப்பட்டது மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. இது சாதாரண நிகழ்வல்ல. நமது நாட்டின் வருமானத்தையும் சுற்றுலா வளர்ச்சியையும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்,” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேல்மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது குறித்து ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற துறைசார் மேற்பார்வை குழுக் கூட்டத்தில் தான் ஏற்கனவே தகவல் வழங்கியதாகவும், அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புத் தரப்பினர் தனக்கு உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இவ்விடயம் பொத்துவில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு பரிசீலனைக்குப் பின், சட்ட அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ உடனடியாக அகற்றப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

(கே. எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *