சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 9 ஏ சித்திபெற்ற மாணவன் பாராட்டி கௌரவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையில் கல்முனை வலய சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவன் ஹில்மி முஹம்மட் றினாப் 9 ஏ பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எச் நுஸ்ரத் பேகம் தெரிவித்தார்.
பாடசாலையில் முதற்தடவையாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி, 9 ஏ சித்திபெற்ற மாணவன் உட்பட உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்ற ஏனைய 13 மாணவர்களும் அதிதிகளால் மாலை அணிவித்து, மகுடம் சூட்டி பேண்ட் வாத்திய குழுவினரால் வரவேற்பு மற்றும் கௌரவம் அளிக்கப்பட்டு மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு (14) வித்தியாலயத்தின் காலை ஆராதனையின் போது பாடசாலையில் இடம்பெற்றது.
க.பொ.த. (சா/த) பிரிவு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் முன்னாள் அதிபர் அதிபர் திலகம் யூ.எல்.நஸார் மற்றும் இன்னாள் அதிபர் எம்.எச். நுஸ்ரத் பேகம் மற்றும் பகுதித் தலைவர் ஏ.எல்.எம். இர்ஷாத் ஆகியோரின் அயராத முயற்சியாலும் கற்பித்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவும் ஆரம்பிக்கப்பட்ட முதல் தடவையே 09 ஏ சித்தி பெறுபேற்றை இப்பாடசாலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இப்பாடசாலையில் உள்ள மாணவர்கள் அதிகமான பாடங்களில் நூறு வீத சித்தி பெற்று சாதனையும் படைத்துள்ளனர்.
அந்த வகையில், அஸ்வர்கான் முஹம்மட் அஸ்ரிப், முஹம்மட் அஸ்வர் ஜஹாஸ் முஹம்மட் ஆகியோர் 7 ஏ சித்தி பெற்றும் றாசீக் அஹமட் நக்கீத், முஹம்மட் பஹ்மி முஹையதீன் முஹம்மட் ஆபித் முஹையதீன், றியாழ் முஹம்மட் அஹ்ஸன் சாரிப் ஆகியோர் 5 ஏ சித்தி பெற்றும் முஹம்மட் ஹம்ஸர் முஹம்மட் ஜஹீஸ், முஹம்மட் ஹாதிம் அஹமட் சஹி ஹிம்ஹி, முஹம்மட் நவாஸ் முஹம்மட் ஹசீப் சதா ஆகியோர் 4 ஏ சித்தி பெற்றும் அலிம்ரூஸ் முன்ஸிப் அஹமட், ஆதம்பாவா முஹம்மட் லைஸ் ஹானி, முஹம்மட் நஜீம் முஹம்மட் சப்ரி, சுல்பிகார் முஹம்மட் அன்ஸாப் ஆகியோர் 3 ஏ சித்தியும் பெற்றுள்ளனர்.
முன்னாள் அதிபர் ‘அதிபர் திலகம்’ யூ.எல்.நஸார், 9 ஏ சித்திபெறும் ஒவ்வொரு மாணவருக்கும் 10,000 ரூபாய் பணப் பரிசாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததற்கு அமைய, இப்பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 9 ஏ பெற்ற மாணவனுக்கு அவர் வாக்குறுதி அளித்தபடி 10,000 ரூபாய் பணம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ‘அதிபர் திலகம்’ யூ.எல்.நஸார், அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலிக், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார், உட்பட பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், 9 ஏ சித்தி பெற்ற மாணவனின் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டு சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களோடு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
அத்துடன் இப் பிரிவுக்கு பகுதித் தலைவராக இருந்து இம்மாணவர்களின் வெற்றிக்கு அயராது கடமையாற்றிய ஏ.எல்.எம். இர்ஷாத் ஆசிரியர் முன்னாள் அதிபர் யூ.எல்.நஸார் அவர்களால் பொன்னாடை போர்த்தி, பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள், அன்பளிப்புகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









(எம்.எஸ்.எம்.ஸாகிர்)