உள்நாடு

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கல்முனையில் பீச் கிளீனிங்க்..!

அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்கள் நேற்று புதன்கிழமை (09) சுத்தம் செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசாலின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிப் நௌஷாத் ஆகியோரின் நெறிப்படுத்தலில் மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைகள் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் கூட்டாக இப்பணிகளில் ஈடுபட்டனர்.

இதன் கீழ் சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களில் பொது மக்கள் ஒன்றுகூடுகின்ற பிரசித்தமான பொழுதுபோக்கு இடங்களும் குப்பைகள் கூடுதலாக தேங்கிக் கிடந்த பகுதிகளும் விஷேடமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இக்களப்பணியில் சிறப்பாக ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்தேச்சியாக சுத்திகரிப்பு செய்யப்படுகின்ற கடற்கரை, கடற்கரைப் பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பொது இடங்களில் குப்பைகள் போடுவதை தவிர்ந்து கொள்ளுமாறும் இவ்வாறான இடங்களை அழகாக பேணிப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுள்ளார்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *