இளம் கண்டுபிடிப்பாளர் விருதை பெற்ற நிந்தவூர் அல்/அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன்
2025ஆம் ஆண்டின் அகில இலங்கை ரீதியாக நாடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளருக்கான திறமைக்கான களம் காணும் போட்டி நிகழ்வில் பதுருதீன் லாபீர் மற்றும் பதுரிய்யா பேகம் தம்பதிகளின் மூத்த புதல்வரான நிந்தவூர் அல்/அஷ்ரக் தேசிய பாடசாலையில் கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும், இளம் அறிவிப்பாளருமான மாணவன் லாபீர் முஹம்மட் சிமாம் முதலாம் இடத்தினை பெற்று 2025ம் ஆண்டின் (Title winner) இளம் கண்டுபிடிப்பாளர் எனும் விருதை பெற்றுள்ளார்.
சிறு வயதிலிருந்தே கண்டுபிடிப்பு, ஆக்கத்திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவுத் தேடல் என பல துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் நவீன உலகில் அதி வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்துத் துறையில் காணப்படும் சாதகமான விடயங்களை தவிர்த்து ஏற்படும் பாதகமான விளைவுகளே அதிகம் என்பதனை அவதானித்து இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு போக்குவரத்து கட்டுப்பாட்டு ரோபோ (Humanoid Traffic Controller Robot) எனும் தொழில்நுட்ப அறிவாற்றலைக் கொண்ட கண்டுபிடிப்பே இவரால் படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 08.07.2025 செவ்வாய்க் கிழமை இலங்கையின் பிரபல தனியார் பல்கலைக்கழகமான ICBT Campusயினால் நாடாத்தப்பட்ட Exito கண்டுபிடிப்பாளர் போட்டியில் இலங்கையில் இருந்து ரோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, DS. சேனாநாயக்கா கல்லூரி, சாஹிரா கல்லூரி, என பல கல்லூரிகளில் இருந்தும் சுமார் 160 மாணவர்கள்: குழு மற்றும் தனி என 68 கண்டுபிடிப்புக்கள் கண்காட்சிக்காக பல்கலைக்கழகத்தின் ஆராதனை மண்டபத்தில் வைக்கப்பட்டதுடன் துறை ரீதியில் தேர்ச்சி பெற்ற சிரேஸ்ட விரிவுரையாளர்களின் மூலம் இக் கண்டுபிடிப்புக்கள் பரிசீலிக்கப்பட்டு முதல் மூன்று இடங்களும் தெரிவு செய்யப்பட்டன.
இதில் முதல் இடத்தினைப் பெற்ற ஒலுவிலைச் சேர்ந்த இம் மாணவனுக்கு 25000/- ரூபாய் பணப்பரிசிலும் UK (OTHM) தரத்திலான International diploma in Information and Communication Technology கற்கை நெறிக்கு 100% புலமைப்பரிசிலும், தேசிய ரீதியிலான சான்றிதழும் ICBT Campus இன் CEO, தலைமை அதிகாரி Dr.சம்பத் கன்னங்கரா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

(இசட். முஹம்மட் இம்தாத்)