கல்குடா முஸ்லிம்களின் காணி விவகாரம். இன்று இடம்பெற்ற அமைதிப் பேரணியும் மகஜர் கையளிப்பும்

கல்குடா முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக்கிளையில் ஏற்பாடு செய்த பிரதேசம் தழுவிய அமைதிப்பேரணியும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) ஜும்ஆத்தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது.
இப்பேரணியில் கல்குடா பிரதேச ஜூம்ஆ பள்ளிவாயல்களிலிருந்து வந்த பொது மக்கள் கலந்து கொண்டதுடன், பிரதேச சமூக அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது நிறுவனங்களின் நிருவாகிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு நீதியைப்பெறும் பொருட்டு கடந்த காலத்தில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை அமுல்படுத்துவதில் தொடர்ந்தும் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக தடைகள் இருந்து வருகின்றன.
எமது காணி மற்றும் எல்லைப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியமான அரசியல் சூழலொன்று நாட்டில் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கருதுவதால் எமது பிரச்சினையினை சமூக மயப்படுத்தி மாவட்ட மற்றும் மத்திய அரச நிருவாத்திற்கு தெரியப்படுத்தி அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமைதிப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
அமைதிப்பேரணியில் கலந்து கொண்டோர் எங்களுக்கு அநீதி செய்யாதே இழந்த காணியை மீண்டும் தா என கோசங்கள் எழுப்பி தமது கோரிக்கையை முன்வைத்ததுடன்,கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்துபிரித்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இணைத்த 05 கிராம சேவகர் பிரிவுகளையும் மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைக்குமாறும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு பன்னம்பலன ஆணைக்குளுவின் சிபாரிசினை நடைமுறைப்படுத்த கோறியும் ஜனாதிபதிக்கு தனித்தனியான மகஜர்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
உரிமை தொடர்பாக கோறிக்கை விடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப்பேரணியில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள், பள்ளிவாயல்களில் தர்ம கர்த்தாக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கிய பொலிஸார், இராணுவத்தினருக்கும் ஜம்இய்யதுல் உலமா சபையினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதே வேளை இப் பேரணியின் போது அமைக்கப்பட்டிருந்த மேடையில் அரசியல் பிரமுகர்கள் ஏறியபோது அரசியல் பிரமுகர்களை கீழே இறங்குமாறு பொது மக்கள் கூச்சலிட்டதில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் மீறாவோடையை சேர்ந்த சாஹுல் ஹமீட் அம்ஜத் (வயது – 21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(எஸ்.எம்.முர்ஷித்)