உள்நாடு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

வெளிநாடுகளில் முன்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவம் போன்று எமது நாட்டிலும் முன்பள்ளிகளுக்கான தேசிய மட்டத்தில் கட்டமைப்புக்களை உருவாக்கி 09 மாகாணங்களில் இயங்கி வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என சிறுவர், மகளிர் அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நேற்று முன்தினம் (09.07.2025) பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் 1828 முன்பள்ளி பாடசாலைகளும், 3884 முன்பள்ளி ஆசிரியர்களும், 53085 முன்பள்ளி மாணவர்களும் உள்ளனர்.

கிழக்கு மாகாண 2500 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் முன்பள்ளி பாடசாலை பணியகத்தால் மாதாந்தம் 5000/- மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றன. 1384 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் பிரதேச சபை, பிரதேச செயலகம், சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்தில் இருந்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 6000/- ரூபாவாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமது பிள்ளைகளின் முன்பள்ளித் துறைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்க அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலையில் நமது நாட்டில் 09 மாகாணங்களிலும் இயங்கி வரும் முன்பள்ளி கல்விப் பணியகங்கள் வெவ்வேறு பாடவிதானங்களும், செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நமது நாட்டின் 09 மாகாண சபைகளில் செயற்படுத்தப்பட்டு வரும் முன்பள்ளிகள் தொடர்பான விபரங்களையும் உள்ளூராட்சி சபைகள், அரசாங்க நிறுவனங்களால் நடாத்தப்பட்டு வரும் முன்பள்ளிகளின் விபரங்களைப் பெற்று நமது நாட்டுக்கான முன்பள்ளிகளுக்கான பொதுவான பாடத்திட்டம், செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக முக்கியமானதாகும்.

09 மாகாணங்களில் முன்பள்ளிப் பணியகங்களுக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த கால அரசாங்கங்கள் செயற்பட்டது போல் உங்களுடைய ஆட்சியிலும் முன்பள்ளித்துறைக்கு அரசியல் பிரமுகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, எதிர்காலத்தில் நமது நாட்டில் இயங்கி வரும் 09 மாகாண முன்பள்ளி பணியகங்களின் உயர்பதவிகளுக்கு கல்வித்துறையில் அனுபவம் உள்ளவர்களை நியமிப்பதற்கான விஷேட ஏற்பாடுகளை அமைச்சு மேற்கொள்ள வேண்டும். முன்பள்ளித்துறையை எதிர்காலத்தில் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான முன் செயற்பாடுகளை அமைச்சு இப்போதிருந்தே முன்னெடுக்க வேண்டும்.

முன்பள்ளிகளுக்கான துறைகள் சகல மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் மாகாண சபைகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு நமது நாட்டில் தேசிய மட்டத்தில் முன்பள்ளித்துறைக்கான ஒரே விதமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக பதிலளித்த மகளிர், சிறுவர் அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் எதிர்காலத்தில் தேசிய ரீதியில் முன்பள்ளித்துறைக்கான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான செயற்பாடுகளை கல்வி,உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், இச் செயற்பாடுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

(கே. எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *