“Nohazz Info – 2025” கிண்ணத்தை சுவீகரித்தது அரசாங்க திரைப்பட பிரிவு..!
அரசாங்க தகவல் திணைக்களத்தில் பணிபுரிகின்ற உத்தியோகத்தர்களிடத்தில் நட்புணர்வினை மேம்படுத்தும் நோக்கில் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற மென்பந்து கிரிக்கெட் போட்டி இவ்வருடமும் கடந்த (05) சனிக்கிழமை பொல்ஹேன்கொட மகாமாத்ய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
“ Nohazz Info – 2025” கிண்ணத்துக்காக 06 அணிகள் மோதிய இந்த தொடரில் இம்முறை அரசாங்க திரைப்பட பிரிவு சாம்பியனாக தெரிவானது. அதேபோன்று இரண்டாம் இடத்தினை பிரச்சாரப் பிரிவு பெற்றுக் கொண்டது.
இந்த கிரிக்கெட் தொடருக்கு பிரதான அணுசரனையினை “Nohazz ” நிறுவனம் வழங்கியதோடு, தொடரின் இறுதியில் “ழோயணண” நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற ஊடக அடையாள அட்டை பிரிவின் தமாலி மதுஷானி அவர்களுக்கு பெறுமதியான துணி துவைக்கும் இயந்திரமொன்று வழங்கப்பட்டது.
இத்தொடரின் நாயகனாக பிரச்சார பிரிவின் முதித அபேநாயக்கவும், சிறந்த துடுப்பாட்ட வீரராக அரசாங்க திரைப்பட பிரிவின் கோலிதவும், சிறந்த பந்து வீச்சாளராக அரசாங்க திரைப்பட பிரிவின் ஷிரானும், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக அரசாங்க திரைப்பட பிரிவின் ஜனகவும் தெரிவாகினர்.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த தொடரில், “Nohazz ” நிறுவனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் இணை ஸ்தாபகர் திருமதி. ஜானகி விஜேசிங்க, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியங்க சன்ஜீவ அவர்கள் உட்பட இணை அணுசரனை வழங்கிய நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
(எஸ்.ஏ.எம். பவாஸ்)





