கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினால் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கோரி அமைதிப்பேரணி
கல்குடா முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக்கிளையில் ஏற்பாட்டில் எதிர்வரும் 11.07.2025ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகையின் இடம்பெறும் அமைதிப்பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினால் விடுக்கப்பட்டுள்ள அமைதிப்பேரணி அழைப்பில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25.51 வீதமாக வசிக்கின்ற முஸ்லிம் சமூகம் மாவட்டத்தின் 2,633 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வெறும் 20 சதுர கிலோ மீட்டரான 1 % சத வீதத்திற்குள் சுருக்கப்பட்டு பெரும் அநீதிக்குள்ளாக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வருகிறோம்.
இதற்கு நீதியைப்பெறும் பொருட்டு கடந்த காலத்தில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை அமுல்படுத்துவதில் தொடர்ந்தும் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக தடைகள் இருந்து வருகின்றன.
எமது காணி மற்றும் எல்லைப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியமான அரசியல் சூழலொன்று நாட்டில் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கருதுவதால் எமது பிரச்சினையினை சமூக மயப்படுத்தி மாவட்ட மற்றும் மத்திய அரச நிருவாத்திற்கு தெரியப்படுத்தி அழுத்தம் கொடுக்கும் நோக்கில் எமது பிரதேசம் தழுவிய பாரிய அமைதிப்பேரணியொன்றினை எதிர்வரும் 11.07.2025ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ த்தொழுகை நிறைவடைந்தவுடன் நடாத்துவதற்கு 08.07.2025 ஆம் திகதி கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் ஒருங்கிணைப்பில் பிரதேசத்தின் பிரதான ஜூம்ஆ பள்ளிவாயலின் தர்ம கர்த்தாக்கள், கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைகளின் கௌரவ உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எனவே, மேற்படி அமைதிப்பேரணியினை எமது சமூகத்தின் நன்மையினைக் கருத்திற்கொண்டும் இன நல்லுறவை அடிப்படையாக வைத்தும் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வினயமாக வேண்டிக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)