ஓட்டமாவடியில் இயக்கத்துக்கு வந்த கோபுர மணிக்கூடு..!
மிக நீண்டகாலமாக இயங்காமல் காணப்பட்ட ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர மணிக்கூடு இன்று (09/07/2025) முதல் இயக்கத்திற்கு வந்துள்ளது.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பழுதடைந்து நிலையில் காணப்பட்ட குறித்த மணிக்கூடு புதிதாகப் பதவியேற்ற தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, பதவியேற்று முதற்பணியாக நேரடியாக விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது குறித்த மணிக்கூட்டை தொடர்ச்சியாக இயங்க வைக்கத்தேவையான நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளர், கொழும்பிலுள்ள வட்ஸ்கோ நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று பழுதடைந்த மணிக்கூட்டை திருத்தி இயங்க வைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான பழுதுகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் குறித்த நிறுவனத்தின் பொறியியலாளரூடாக சபையில் பணி புரியும் ஊழியருக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்று முதல் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள மணிக்கூடு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படும் என தவிசாளர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் இம்மணிக்கூட்டின் திருத்தப்பணிகளுக்கு சபையின் பாரியளவிலான நிதி செலவு செய்யப்பட்டுள்ளதோடு, இதே போல் இயக்கமின்றி பழுதடைந்து காணப்படும் தியாவட்டவான் மற்றும் காகித நகர் (காவத்தமுனை) மணிக்கூட்டுக்கோபுர மணிக்கூடுகளை அகற்றி விட்டு புதிய மணிக்கூடுகளை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)



