காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு BRICS அமைப்பு வேண்டுகோள், ஈரான் மீதான தாக்குதல்களுக்கும் கண்டனம்..!
காஸாவில் பகுதியில் உடனடி, நிரந்தர மற்றும் நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்திற்கு பிரிக்ஸ் நாடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) ஒருங்கிணைந்த கோரிக்கையொன்றினை விடுத்துள்ளன, காஸா பகுதியிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களின் ஏனைய அனைத்து பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
ரியோ டி ஜெனிரோவில் நடந்த உச்சிமாநாட்டின் போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது, மேலும் தோஹாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாவுள்ள நிலையில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘உடனடி, நிரந்தர மற்றும் நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்தை அடைவதற்காக பேச்சுவார்த்தைகளில் நல்லெண்ணத்துடன் ஈடுபடுமாறு குறித்த தரப்புக்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம்,’ எனவும் அக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆந் திகதி தொடக்கம் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல்களையும் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. எனினும் அமெரிக்கா அல்லது இஸ்ரேலை நேரடியாகக் குறிப்பிடவில்லை, பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடான ஈரானுக்கு குறித்த உச்சிமாநாட்டில் வலுவான ஆதரவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ஐ.அப்துல் நஸார்)