காயத்தால் ரி20 தொடரிலிருந்து ஹசரங்க நீக்கம்
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க தொடை தசைநார் காயம் காரணமாக, பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக பல்லேகலே மைதானத்தில் நேற்று இடம்பெற்ற 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஹசரங்கவுக்கு உபாதை ஏற்பட்டது. போட்டி நிறைவுற்றதன் பின்னர் அவருக்கான பரிசோதனை செய்யப்பட்டு எம்.ஆர்.ஐ அறிக்கை இன்னும் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் ஹசரங்க நாளை (ஜூலை 10) கண்டியில் இடம்பெறவுள்ள முதல் ரி20 தொடருக்கு தகுதியற்றவராக இருக்கலாம் என்று ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன.
காயம் இருந்தபோதிலும், ஹசரங்க கடைசி ஒருநாள் போட்டியில் பந்து வீசினார், 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
ஒருநாள் தொடரை இலங்கை அணி 2:1 என வெற்றி கொண்ட போதிலும் ரி20 தொடரில் ஹசரங்க இல்லாமல் போட்டியிடுவது இலங்கை அணிக்கு பாதகத்தை கொடுக்கலாம்.