எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய காங்கிரஸ் கோரிக்கை..!
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கு பனம்பலன எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
இரு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பாரபட்சமின்றி தமது நிர்வாக கடமைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கடந்த காலங்களில் குறித்த பிரதேச செயலகம் தொடர்பில் ஆணை குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும், இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்ட பக்கச்சார்பான நடவடிக்கைக்கு எதிராக தொடர் நாள் போராட்டத்தை மக்கள் நடத்தியுள்ளனர்.
இந்த பிடதேசங்களின் எல்லை பிரச்சினை இன்று நேற்றைய பிரச்சினை இல்லை. கடந்த 25 வருடமாக மட்டக்களப்பு முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினையாகும்.
கல்குடா தொகுதி மக்கள் தொடர்ந்தும் 25 வருடமாக முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், ஹிஸ்புல்லா என ஓட்டுப்போட்டு வந்தும் இவர்களெல்லாம் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தும் இப்பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால் இவர்களுக்கு இம்மக்கள் ஓட்டுப்போட்டு அதிகாரம் கொடுத்தது எதற்காக?
இதே வேளை மாவட்ட செயலாளர் புதிதாக எல்லையிட்டு முன் வைத்தபோதுதான் முஸ்லிம்களுக்கு விழிப்பு ஏற்பட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
ஆர்ப்பட்டத்தை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் ஹெந்துன் நெத்தி தலையிட்டு மாவட்ட செயலாளரின் திட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை சேராத சிங்களவரான அமைச்சர் ஹெந்துன்னெத்தி ஒரு மொழி பேசும் மக்களுக்கு நீதியை படிப்பித்துள்ளமை தமிழ் முஸ்லிம் உறவுக்கு அவமானமாகும். இந்த திட்டத்தை தடுத்து நிறுத்திய அமைச்சர் ஹெந்துந்நெத்தி பாராட்டுக்குரியவர்.
இதனல்த்தான் நாம் அடிக்கடி சொல்வது எங்கெல்லாம் தமிழ் முஸ்லிம் முரண்பாடு உள்ளதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்களாக, உப செயலாளர்களாக சிங்களவரை நியமிக்க வேண்டும் என.
இப்படியே ஒவ்வொரு தடவையும் தமிழ் தரப்பு ஏதாவது குளறுபடி செய்வதும் பின்னர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்து தடுப்பதும்தான் காலாகாலமாக கிழக்கில் நடக்கிறது. ஆனால் தேர்தல் வந்ததும் பழைய குருடர்களுக்கே முஸ்லிம்கள் வாக்கு போடுவர். பின்னர் ஒப்பாரி வைப்பர்.
ஆட்சி அதிகாரம் கிடைத்தும், தற்போது எம்பி என்ற அந்தஸ்த்து கிடைத்தும் இது விடயத்தில் உடனடி தீர்வு பெற்றுத்தராமல் சமூகத்தை ஏமாற்றும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய சுயநல வெறி கட்சிகளை கிழக்கு மக்கள் ஓரம் கட்டாத வரை கிழக்கு மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க முடியாது.