சமூகங்களிடையே அமைதி, இயல்பு நிலையை ஏற்படுத்த விரைந்து செயற்பட்ட அரசுக்கு நன்றிகள் –

சமூகங்களிடையே அமைதியையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்த விரைந்து செயற்பட்ட கௌரவ அமைச்சருக்கும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் விடுத்துள்ள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாகவது,
கோறளைப்பற்று தெற்கு- கிரான் மற்றும்
கோறளைப்பற்று மத்தி- வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களை வர்த்தமானிப்பிரகடனம் செய்வதற்கு உண்மைக்குப் புறம்பானதும் நியாயமற்றதுமான சிபாரிசுகளை பக்கச்சார்பான வகையில் வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் நடுநிலை தவறிய செயற்பாட்டினால் இப்பிராந்திய மக்களிடையே அமைதியின்மையும் கொந்தளிப்பும் குழப்பங்களும் ஏற்பட்டிருந்ததோடு, ஜனநாயக ரீதியாக கவனயீர்ப்பு போராட்டங்களும் இடம்பெற்று வந்தன.
மாவட்ட செயலாளரின் செயற்பாட்டினால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்ற தரப்பான கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி மக்கள் சார்பாக இப்பிரதேச சபை பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் இவ்விடயத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்றிருந்தது.
யதார்த்த நிலையினைப்புரிந்து கொண்டு, ஏற்படக்கூடிய அசௌகரிகமான சூழ்நிலைமைகளைத் தடுப்பதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் கௌரவ அமைச்சருமான மதிப்புக்குரிய சுனில் ஹந்துன்னெத்தி விரைந்து செயற்பட்டு மாவட்ட செயலாளருக்கு வழங்கிய அறிவுறுத்தல் மூலம் மாவட்ட செயலாளரால் அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை இரத்துச்செய்யப்பட்டு உடனடியாக மீளப்பெறப்பட்டுள்ளது.
இதற்காக இப்பிராந்திய மக்கள் சார்பாகவும் இப்பிரதேச சபை சார்பாகவும் கௌரவ அமைச்சர் அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் மன்புமிகு ஜனாதிபதிக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த 25 வருடகாலங்களாக தீர்க்கப்படாது நியாயமற்ற காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு வந்த சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களின் எல்லை நிர்ணய விடமானது சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சந்தேகங்களையும் அமைதியின்மையினையும் ஏற்படுத்த வழி வகுத்திருந்தது.
மான்புமிகு ஜனாதிபதி தலைமையிலான மக்கள் சக்தி அரசாங்கமானது இவ்விடயத்தை அனைத்துத் தரப்பிற்கும் சம வாய்ப்புக்களும், சமநீதியும் கிடைக்கத்தக்கதான இஸ்தீரமான முடிவுகளை மேற்கொள்ளுமென பாதிக்கப்பட்ட அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.
பிராந்தியத்தில் பொது அமைதி, சமூகங்களிடையேயான நல்லிணக்கமும் சகவாழ்வும் ஏற்பட இப்பிராந்திய மக்களும் மான்புமிகு ஜனாதிபதி அவர்களோடும், அரசாங்கத்தோடு இணைந்து பயணிக்கத் தயாராகவுள்ளனர்.
குறிப்பாக, இலங்கை திருநாட்டின் அரசியல் சமூக போக்களையும் பின்புலங்களையும் தெளிவாக உணர்ந்த கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இம்மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்புத் தலைவராகப்பணி புரிவது இம்மாவட்ட மக்களின் எதிர்காலத்தினை சிறப்பான முறையில் கட்டியெழுப்புமென்று உறுதியாக நம்புகின்றோம் எனத்தெரிவித்துள்ளார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)