உள்நாடு

தொழிற்கல்வியை கட்டாய பாடமாக்க அரசு நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

முறையான, கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பைக் கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து ஜூலை 04 ஆரம்பிக்கப்பட்ட “ஸ்ரம மெஹெயும” (உழைப்பு நடவடிக்கை) திட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்றபோது, கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“தொழிற்கல்வியை மையமாக வைத்து பிரதி அமைச்சர் நலின் ஹேவகேவின் கருத்துப்படி, ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) இலங்கை முழுவதிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

இதனை ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) மூலமாக ஆரம்பித்து வைத்தபோதிலும், தொழிற்கல்வி துறை மீது கவனம் பெறுவதற்காகவும், இதன் முக்கியத்துவத்தை முழு நாட்டிற்கும் காண்பிப்பதற்காகவுமே நாம் இங்கு முயற்சி செய்கின்றோம். தொழிற்கல்வித் துறையே எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக மாறப்போகின்றது. தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளம் கல்வி அமைச்சிலிருந்தே உருவாகிறது. இருப்பினும், நம்மில் பலரும், அதே போன்று நமது நாடும் பல சந்தர்ப்பங்களில் நினைக்காத, கவனம் செலுத்தாத ஒரு முக்கிய பகுதியே இந்த தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் இடமாகவே தொழிற்கல்வி இருந்து வருகின்றது.

இருப்பினும், பாடசாலைப் படிப்பை முடித்து, பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியவில்லை என்றால் செல்லக்கூடிய ஒரு மாற்று இடமாகவே தற்போதும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது என்பதையும், அல்லது மற்ற தேர்வுகள் அனைத்தையும் மேற்கொண்டு அவை கைகூடவில்லை என்றால் இறுதியில் வந்து விழும் இடமாகவே இது கருதப்பட்டு வருகின்றது. இது மிகவும் தவறானதாகும். தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான, புத்திசாலித்தனமான, நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொரு முடிவாகும்.

தொழிற்கல்வி கற்பதற்கு எடுக்கும் முடிவானது தற்செயலாக இருக்க முடியாது, அறியாமையினால் அல்லது இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவாகவும் இருக்க முடியாது. அது தன்னுடைய திறன், தன்னுடைய விருப்பம், உலகத்தை பற்றி தான் கொண்டுள்ள கருத்துக்கள், இந்த எண்ணக்கருக்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் மிகவும் முக்கியமான முடிவாக அமைய வேண்டும்.

அதனாலேயே நாம் 2026 இல் நடைமுறைப்படுத்துவதென தீர்மானித்திருக்கும் புதியக் கல்விச் சீர்திருத்தங்களுக்குள் தொழிற்கல்விக்கு சிறப்பான இடத்தை ஒதுக்கி இருக்கின்றோம். கல்விச் சீர்திருத்தம் என்பது சிறிய விடயம் அல்ல. அது பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அப்பாற்பட்ட பாரிய செயல்திட்டமாகும்.

பாடசாலைக் கல்வியின் மூலமே தொழிற்கல்வியை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி யுகத்திற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க, அந்த மனித வளத்தை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம்,” என்றும், அதற்கு அமைய இந்த நாட்டின் தொழிற்கல்வியை உயரிய இடத்தில் நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கம்பஹா நகர பிதா, மாவட்டச் செயலாளர், கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் பி.எம்.கே. கோமஸ் ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *