க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்: NAITA காரியாலயங்களில் தேசிய ரீதியாக முன்னெடுப்பு..!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான “இலங்கையை சுத்தமாகவும், பசுமையாகவும், மற்றும் சுகாதாரமாகவும் மாற்றுதல்” எனும் வேலைத்திட்டம் மூன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழுள்ள 09 நிறுவனங்களும் அகில இலங்கை ரீதியாக 311 நிலையங்களில் நேற்று(04) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் NAITA வும் மாவட்ட காரியாலயங்களான கல்முனையிலும், அம்பாறையிலும், சாய்ந்தமருது பயிற்சி நிலையத்திலுமாக 3 இடங்களிலும் க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Srilanka) வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை காரியாலயத்தில் NAITAவின் தொழிற் பயிற்சி உத்தியோகத்தர் எம். இராசமோகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ், கல்முனை பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் NAITA உத்தியோகத்தர்கள், பயிலுனர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில், தேசியக் கொடி மற்றும் NAITA கொடிகள் ஏற்றப்பட்டதுடன் உள்ளக மற்றும் வெளியக சுத்தத்திற்காக மாபெரும் சிரமதானம் இடம்பெற்றதுடன் இதனை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட எஸ். இம்தியாஸ் ஆரம்பித்து வைத்தார்.
NAITA வானது அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வண்ணம் சுமார் 50 க்கும் மேற்பட்ட தொழிற் துறைகளை மையப்படுத்தி NVQ சான்றிதழ்களை வழங்குவதனூடாக அவர்களின் தொழில் வாய்ப்பை உறுதிப்படுத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் தற்போது மருத்துவத்துறை, சுற்றுலாத்துறை, கனரக வாகனத்துறை, மின்னியல் துறை என வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள துறைகளில் பயிற்சிகளை வழங்கிக்கொண்டு வருகிறது. தொழில் வாய்ப்பற்ற மற்றும் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இளைஞர்கள் NAITA கல்முனை காரியாலயத்தை தொடர்பு கொள்ளவும்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)







