ஓட்டமாவடி பி.பி.ஏ கிண்ணம் 2017 அணி வசமானது
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பி.பி.ஏ. (PPA) மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்றது.
பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக ஓய்வுபெற்ற அதிபர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
28 பழைய மாணவர் அணிகள் பங்குபற்றிய இத் தொடரின் மின்னொளி இறுதிப் போட்டியில் 2011 ஆம் ஆண்டு அணியும், 2017 ஆம் ஆண்டு அணியும் களமிறங்கின.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய 2017 அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
இதில் கே.ஆர்.எம்.ஹனான் 27 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், எம்.பி.முகம்மட் அதீ 23 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ஆர்.எம்.றிகாஸ், எஸ்.எம்.ஹபீஸ், ஆர்.ஏ.எம்.பாஸித் ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
104 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2011 ஆம் ஆண்டு அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதில், ஆர்.எம்.றிகாஸ் 19 பந்துகளுக்கு 33 ஓட்டங்களையும், எஸ்.எம்.ஹபீஸ் 19 பந்துகளுக்கு 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் எம்.எம்.றினாஸ், எஸ்.றிஸ்வான், எச்.எம்.ஆஷிக் ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அணிக்கு இருபதாயிரம் ரூபாய் பணப்பரிசும் கிண்ணமும், சுற்றுத் தொடரின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட 2017 அணிக்கு முப்பதாயிரம் ரூபாய் பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த பணப் பரிசுகளை பாடசாலையில் அமையப்பெறவுள்ள தொழுகை அறையுடன் இணைந்த பல்தேவைக் கட்டடத்தின் தேவைப்பாட்டுக்கு அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.




(எச்.எம்.எம்.பர்ஸான்)