உள்நாடு

மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரால் பிரதேசம் சார் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டன.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான விஷேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை (02.07.2025) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன் நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் ஒழுங்குபடுத்தலில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இவ்விஷேட கூட்டம் நடைபெற்றிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ராசமாணிக்கம் சாணக்கியன், இளைய தம்பி ஸ்ரீநாத், உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இவ்விஷேட கூட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம். பைரூஸினால் பிரதேசம் தொடர்பாக முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

போக்குவரத்து மேம்பாடும் பேரூந்து சேவைகளின் விரிவாக்கமும் திட்டத்தில்
பொத்தானை தொடக்கம் வாழைச்சேனை வரை தற்போது இயங்கிவரும் பேருந்து சேவையை பொத்தானை, வாகனேரி, மஜ்மா நகர் ஊடாக வாழைச்சேனை வரை விரிவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதிதாக உப புகையிரத தரிப்பு நிலையத்தின் அமைத்தல் தொடர்பாக கோறிக்கை விடுக்கப்பட்டதுடன் அதன் அமைவிடம் மஜ்மா நகருக்குச் செல்லும் வழியில் உள்ள ஓட்டமாவடி சிறாஜியா அறபுக் கல்லூரிக்கு அருகாமையில் ஓர் உப புகையிரத தரிப்பு நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்து தவிசாளரால் சபையோருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதன் மூலம் மஜ்மா நகர், குகனேசபுரம், ஆலங்குளம், காகித நகர், ரஹ்மத் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நேரடியாக பயனடைவர் என தெளிவூட்டப்பட்டது.

ஓட்டமாவடி பிரதான வீதியோரமாக 30 வருடங்களுக்கும் மேலாக சேதமடைந்த கருங்கற்களாலான வடிகான்களை கொங்ரீட் வடிகான்களாக புனரமைத்து, அவற்றுக்கு மூடிகளிட்டு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறும், வெள்ளநீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக அவற்றை மாற்றித்தருமாறும் தவிசாளரால் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

விவசாயிகளின் நலன் கருதி வட்டாத்திமுனை பாலம் புனரமைப்பு பிரதேச விவசாயிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் கிடச்சிமடு வட்டாத்திமுனை பாலத்தை புனரமைப்பதன் அவசியமும் தேவைப்பாடும் தெளிவூட்டப்பட்டு அதனை புனரமைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஓட்டமாவடி MPCS வீதி என்பது எமது கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒரு பிரதான பாதை என்ற அடிப்படையில் அதற்கு காபட் இட்டு பொருத்தமான வடிகால்கள் அமைத்துத் தருமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டது.

மீராவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதான வீதிகளில் மூடியிடப்படாமல் காணப்படும் வடிகால்களை புனரமைத்து, அவற்றுக்கு மூடிகளிட்டுத் தருமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டது.

பிரதேச விவசாயிகளால் அதிகம் பயன்படுத்தும் காகித நகர் – வாகனேரி வீதி செப்பனிடப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தெளிவூட்டப்பட்டு அதனை விரைவில் செப்பனிட்டுத் தருமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டது.

பாரம்பரிய பூர்வீகமான வடமுனை, ஊத்துச்சேனை, சாலம்பன்சேனை, கள்ளிச்சை, குளத்துமடு, மர்யம் கிராமம், மஜ்மா நகர் கிழக்கு, மஜ்மா நகர் மேற்கு, தியாவட்டவான் போன்ற கிராமங்களில் உள்ள வீதிகளை காபட் இட்டுத் தருமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டது.

மஜ்மா நகருக்குச் செல்லும் வழியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீர்செய்து பாதுகாப்பான கடவையை அமைத்துத் தருமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டது அத்துடன் ரிதிதென்ன வீதியில் இருந்து கிடச்சிமடுவிற்கு செல்லும் வழியில் உள்ள கடவையை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றித் தருமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டது
மஜ்மா கிழக்கு புகையிரத கடவை: மஜ்மா கிழக்கிற்கு செல்லும் வழியில் சிறாஜியா அறபுக் கல்லூரிக்கு அருகில் உள்ள கடவையை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக அமைத்துத் தருமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டது.

கொழும்பு பிரதான வீதி, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களை இணைக்கும் முக்கிய சந்தியென்ற அடிப்படையிலும் கடந்த காலங்களில் அதிகமான வீதி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ள சந்தியென்ற அடிப்படையிலும் மிக அவசரமாக வீதிச் சமிக்ஞை விளக்கை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு குறித்த கோரிக்கை மிக அவசரமாக நிறைவேற்றப்படும் என கௌரவ அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.

ஓட்டமாவடி மணிக்கூட்டு சுற்றுவட்டாரத்தில் வீதி சமிக்ஞை அமைப்பதன் அவசியம் தெளிவூட்டப்பட்டு அதற்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

தவிசாளரால் 09 அம்சக் கோரிக்கைகள் பிரதேசம் சார்பாக முன்வைக்கப்பட்டவையாகும். எமது பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக பேசுபொருளாக மட்டுமே காணப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பூரண தெளிவூட்டல் வழங்கப்பட்டதோடு அவற்றை நிறைவேற்றித் தருவதன் அவசியம் குறித்தும் அரச தரப்புக்கும் எத்திவைக்கப்பட்டது என்று கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம். பைரூஸ் தெரிவித்தார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *