ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்குகாத்தான்குடி மீடியா போரம் கண்டனம்
ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிப்பதாக காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் எம்.எஸ்.எம் நூர்தீன், பொதுச் செயலாளர் எம்.ஐ.அப்துல் நஸார் ஆகியோாின் கையொப்பத்துடன் 03.07.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது கடந்த 2025 ஜூலை 02ஆம் திகதி இரவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, காத்தான்குடி மீடியா போரம் சார்பில் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஊடகவியலாளர் மப்றூக் காத்தான்குடி சார்ந்த நெருக்கடிகள் ஏற்பட்ட ஏற்பட்ட போதெல்லாம் தனது ஊடகப் புலமை மூலம் அவற்றை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கும் நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கும் காரணமாக செயற்பட்டவர்
சமூகத்திற்காக பொறுப்பபுவாய்ந்த தருணங்கள், அனர்த்தங்கள் மற்றும் சவால்களின்போதெல்லாம் தனது ஊடக் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றிவரும் இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் மீறுகின்ற தீவிரமான செயற்பாடாகும். இது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட கொடூர நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதி என்பவர் விமர்சனங்களை எதிர்கொள்ளும் திராணியுள்ளவராக இருக்க வேண்டுமேயொழிய இவ்வாறு வன்முறை சார்ந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் கீழ்தரமான செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவராகவும் தவறான முன்மாதிரியை எதிர்கால சமூகத்திற்கும் வழங்குபவராகவும் இருக்கக் கூடாது. இவ்வாறான தாக்குதல்கள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பும் விடயமாகவும் அமைகின்றது.
சம்பந்தப்பட்ட குழுவினரையும், அவர்களை ஊக்குவித்த அரசியல்வாதியையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் கொண்டு செல்ல வேண்டும். விசாரணைகள் நேர்மையாகவும் விரைவாகவும் நடைபெற வேண்டும். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கும், சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களுக்கும் இருக்கின்றது என்பதை இத்தருணத்தில. சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் முகவரியாகும், அதை பாதிக்கும் எவ்வித முயற்சிகளையும் காத்தான்குடி மீடியா போரம் வன்மையாக கண்டிக்கின்றது எனவும் அந்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
(எம்.ஐ. அப்துல் நஸார்)