ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கண்டனம்
“நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கண்டனமொன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் விடுத்துள்ள அறிக்கையில், ஊடகவியலாளர் மப்றூக் மீதான மிலேச்சத் தனமான தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
ஊடகத் துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இது போன்ற சம்பவங்களை ஜனநாயகத்தை மதிக்கின்ற எவராலும் அனுமதிக்க முடியாது.
நீதியான நேர்மை மிக்க நடுநிலை தவறாத எழுத்தாளர் மப்றூக் மீதான இந்த தாக்குதல் சம்பவமானது அவர்களின் அரசியல் வாங்குரோத்து நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
வன்முறை கலாச்சாரத்தின் மூலம் அடக்கியாள நினைப்பவர்களுக்கு கடந்த காலங்களில் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
எனவே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை பாரபட்சம் பாராது பொலிசார் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

(பாறுக் ஷிஹான்)