இலங்கை எதிர் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
இலங்கை அணியை சரித் அசலங்கா வழிநடத்தவுள்ளார். அதேபோல் பங்காளாதேஷ் அணியை மெஹிடி ஹசன் மிராஸ் முதன்முறையாக வழிநடத்தவுள்ளார்.
கடந்த 2024 மார்ச் மாதத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். கடந்த முறை இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று போட்டிகளில் பங்களாதேஷ் வெற்றி பெற்றிருந்தது.
எவ்வாறாயினும், ஒருநாள் போட்டிகளில் சமீபத்திய செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணி 10வது இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்கா, இன்று ஆடுகளத்தை சோதித்த பின்னர் இறுதி அணி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் புதிய லைட்டிங் திட்டத்தின் கீழ் இந்தப் போட்டி நடைபெறும்.
இதேவேளை, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி, சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒரு நான் போட்டிகளுக்கு அறிமுக்கப்படுத்தியுள்ள புதிய விதிகளின் கீழ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.