உலகம்

இந்திய முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு.முதலீடுகளில் ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இருக்காது.ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்தனர்.

தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் (CII) ஒருங்கிணைப்பின் கீழ் பல முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட சுமார் 20 இந்திய தொழில்முனைவோர் குழு எமது நாட்டில் செயற்பாட்டிலுள்ள திட்டமொன்றில் பங்கேற்கிறது. இந்தக் குழு இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தது.

இந்தியாவிற்கு அண்மையில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தக் குழு இலங்கை வந்துள்ளது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடனும் இலங்கை முதலீட்டுச் சபை போன்ற முன்னணி அரசு நிறுவனங்களுடன் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை முதலீட்டாளர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் சிறந்த பொருளாதார நிலைமை மற்றும் முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி விளக்கினார். பாரிய அளவிலான முதலீடுகளைத் தக்கவைத்து அவற்றைப் பராமரிக்க தேவையான சட்ட கட்டமைப்பும், நிறுவன கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீடுகளில் வீண் விரயம் மற்றும் ஊழலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக பிராந்திய முதலீட்டாளர்களை எளிதாக ஈர்ப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளில் புதிய வணிக வாய்ப்புகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் மூலோபாய இருப்பிடம் முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான ஆர்வத்தை ஈர்த்துள்ளது என்று கூறிய இந்திய தொழில்முனைவோர், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதியின் தெளிவுபடுத்தலைப் பாராட்டியதோடு அது அவர்களுக்கு ஊக்கத்தையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது என்றும் கூறினர்.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள், இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் (CII) முன்னாள் தலைவரும் ITC லிமிடெட் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சஞ்சீவ் பூரி மற்றும் பல முன்னணி இந்திய நிறுவனங்களின் பிரதானிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *