புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் இஸ்லாமிய (முஹர்ரம்) புது வருட நிகழ்வுகள்..!
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிகாட்டலின் பிரகாரம் ஹிஜ்ரி 1447வது முஹர்ரம் புத்தாண்டு ஆரம்பமானதை முன்னிட்டு நாடெங்கும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 27ஆம் திகதி பல்வேறு கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில், புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்ற முஹர்ரம் புத்தாண்டு நிகழ்வில் புத்தளம் கல்வி வலயத்தின் புத்தளம் வடக்கு கல்விப் பணிப்பாளர், திருமதி அஸ்கா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வின் தலைமை பொறுப்பை பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எஸ். ரஸாத் வகித்தார். இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக பஹன மீடியா பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளர், அஷ்ஷெய்க், எம்.எஸ்.எம். அப்துல் முஜீப் (கபூரி) கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
ஹிஜ்ரி புத்தாண்டின் முக்கியத்துவம், அது கற்றுத் தரும் பாடங்கள் குறித்து விளக்கினார். முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுதல், வாழ்க்கையில் குறிக்கோள்களை அடைவதற்கு தியாகத்தின் அவசியம், சமூக நீதியை நிலை நாட்டுவதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பிற சமூக உறுப்பு குழுக்களின் பங்கு போன்ற அம்சங்களை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், கிளைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)


