“வரி பயமல்ல, வாய்ப்பே” முஸ்லிம் வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
“வரி என்பது தண்டனை அல்ல; இது நாட்டு வளர்ச்சிக்கான நம் பங்களிப்பு!” – எனக் குறித்தது இலங்கை இரை வரி திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் திரு N.M.M. மிஃப்லி அவர்கள். கடந்த 2025 ஜூன் 27 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு, மினுவங்கொடையில் நடைபெற்ற வரி விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வு, AL AMAN SDEC, Al Aman Old Boys Association (OBA) மற்றும் Serandib Business Forum – Gampaha ஆகியவற்றின் ஒத்துழைப்பில் நடத்தியது. நிகழ்விற்கு அமனா வங்கி – நீர்கொழும்பு கிளை பெரும் அனுசரணையளித்தது.
அல்அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் உம்மு ஹபீபா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வணிகத்துறையினர், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திரு மிஃப்லி அவர்களின் உரையில் இடம்பெற்ற சில முக்கியமான கருத்துகள் வரி மீதான பார்வையை மாற்றக் கூடியவை:
“சட்டப்பூர்வமான வரி பதிவு என்பது ஒரு தொழில் நெறிமுறை மட்டுமல்ல, சமூக ஒழுங்கின் அடையாளம்.”
“அரசாங்கத்திற்கும் வியாபாரிகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்புவது வரி ஒழுங்கை பின்பற்றுவதில்தான் இருக்கிறது.”
“வரி செலுத்தும் பழக்கம் இளைஞர்களிடையே உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.”
“ஒரு வியாபாரி, வரியை ஒழுங்காக செலுத்தும்போது – வணிகத்தில் நிம்மதி, வளர்ச்சி, ஆதாயம் அனைத்தும் கிடைக்கும்.”
இத்தகவல்களின் பின்னணியில், வரி செலுத்துவதைச் சமுதாயச் சுமையாக அல்ல, சமூக பொறுப்பாகவும், நாட்டுக்கான நற்பணி செயல் எனவும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சமூக மாற்றத்திற்கான சூழலை உருவாக்கும் முயற்சி
வணிகத்துறையில் பயம், அறியாமை, தவறான புரிதல்கள் போன்றவற்றால் வரி செலுத்துவதைத் தவிர்க்கும் எண்ணங்கள் இன்னும் சிலரிடையே காணப்படுகின்றன. இந்நிலையை மாற்றி, அரசியலமைப்புச் சட்டத்திற்குள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் ஓர் தொலைநோக்கு பார்வை இந்த நிகழ்வின் மூலம் உருவானது.
விழிப்புணர்வுடன் இணைந்த நம்பிக்கை
இந்நிகழ்வை தொடர்ந்து, “இதேபோன்ற நிகழ்வுகள் மாவட்டம் தோறும் நடை பெற வேண்டும்” என்ற பங்கேற்பாளர்களின் கருத்துகள் வலுப்பெற்றன. சமூகத்தின் வணிகரீதியான நலனும், நாட்டு பொருளாதாரத்தின் வலிமையும் இதனுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை என்பதை மிஃப்லி அவர்களின் உரை உறுதியாக்கியது.
(ஊடகவியலாளர்: ஏ. சி. பௌசுல் அலிம்)