நெலும்வெவ வெந்நீர் ஊற்று பகுதிகளை அபிவிருத்தி செய்யத் திட்டம்
கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை வெலிகந்த நெலும்வெவ பகுதியில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதிகள் முறையாக அபிவிருத்தி செய்யப்படாத காரணத்தால் அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு ஆர்வம் குறைந்துள்ளது.
இது தொடர்பிலான கலந்துரையாடல் (24) முற்பகல் அந்தப்பகுதியில் இடம்பெற்றதுடன் அங்கு கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் நெலும்வெவ வெந்நீர் ஊற்றுக்களை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவம் அதன் சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப திறன் போன்று அதன் தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
வெந்நீர் ஊற்றுகளை சுற்றியுள்ள பகுதியில் வனப்பகுதியை அதிகரித்தல் தீவை அழகு படுத்தல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலகுபடுத்தும் வகையில் நிலப்பகுதியில் இருந்து தீவு வரை பாலம் அமைத்தல் போன்ற விடையங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் வெலிகந்த பிரதேச சபை தவிசாளர் டி.டபிள்யூ.வசந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் நிலத்தடி நீரியல் நிபுணர் தர்ம குணரத்ன ஆகியோருடன் கிளீன் ஸ்ரீ லங்கா செயலகம் இலங்கை மகாவலி அதிகார சபை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெலிகந்த பிரதேச செயலகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)