கொழும்பில் போரா மாநாடு..! விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்..!
போரா மாநாடு நாளை 25 மற்றும் ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை பம்பலப்பிட்டி போரா மஸ்ஜிதிலும், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திலும் நடைபெறவுள்ள நிலையில், விஷேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதால், குறிப்பிட்ட வீதிகளில் கொள்கலன் லொறிகள் மற்றும் கல் அல்லது மணல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லொறிகளின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, காமினி வட்டச் சந்தியில் இருந்து டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, டார்லி வீதி மற்றும் மருதானை ஆகிய பகுதிகளுக்கு இந்த கனரக வாகனங்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை, பம்பலப்பிட்டி போரா மஸ்ஜிதில் தினமும் காலை 7:00 மணி முதல் 11:30 மணி வரையும், பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் போரா மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த நேரங்களில், வெள்ளவத்தையில் இருந்து மரைன் டிரைவ் வழியாக பம்பலப்பிட்டி ஊடாக கொள்ளுப்பிட்டியை நோக்கியும், கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி ஊடாக வெள்ளவத்தை நோக்கியும் கனரக வாகனங்களுக்கு நுழைவு கட்டுப்படுத்தப்படும்.
பம்பலப்பிட்டியிலுள்ள கிளெனபர் பிளேஸ் வீதியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, அது காலி வீதி ஊடாக மரைன் டிரைவுக்கு திருப்பி விடப்படும்.
பம்பலப்பிட்டியிலுள்ள அதம்லி பிளேஸுக்கு குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே நுழைவு அனுமதிக்கப்படும்.
இந்தக் காலப்பகுதியில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.