உள்நாடு

இம்தியாஸ் பாகீர் மாகாரின் நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பாக “மனச்சாட்சி” வெளியீடு 25 ம் திகதி

இலங்கை தேசம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. 1931 ஆம் ஆண்டு இலங்கைக்கு பிரித்தானியர் ஆட்சியில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. அன்றைய நாளில் இருந்து இலங்கையில் பிரதிநிதித்துவ சனநாயக முறை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றது. இந்த பிரதிநிதித்துவ சனநாயக ஆட்சியில் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகின்றது.

அன்றைய காலம் முதல் இன்று வரையில் நாடாளுமன்றத்திற்கு தொகுதிவாரி பிரதிநிதித்துவம் மூலமும் 1978 ஆம் அண்டின் பின்னர் விகிதாசார பிரதிநிதித்துவம் மூலமும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற மரபு இருந்து வருகின்றது. இவ்வாறு நாடாளு மன்றம் செல்லும் மக்கள் பிரதிநிதிகள் நாட்டில் மக்களது தேவைகள், பிரச்சினைகள், குறைபாடுகள், மக்களுக்கு ஆட்சியாளர்களால் இழைக்கப்படுகின்ற அநீதிகள், உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்களின் போது திடகாத்திரமான முறையில் ஒவ்வொரு விவாதங்களின் போதும் வெளிப்படுத்தும் ஆற்றல்களும் வல்லமையும் இருக்கின்றவர்களே நாட்டில் பரவலாக பேசப்படுகின்ற அரசியல்வாதிகளாக இருந்து வருகின்றனர்.
அத்தகையவர்கள் வரிசையில் முன்னாள் சபாநாயகராக இருந்த பாகீர் மாகரின் புதல்வாரன இம்தியாஸ் மாகாரும் அவரது அடிச்சுவட்டில் அரசியல் வரலாற்றில் தனியான இடம் பிடித்த ஒருவராவார்.

அந்தவிற்கு அவரது அரசியல் வாழ்வில் எந்தவிதமான சுயநலன்களும் இல்லாமல் மக்கள் நலனுக்காக மாத்திரமே அரசியல் செய்த ஒருவராவார். களுத்தறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் தெரிவாகிய அவர் நீண்டகாலமாக அப்போதைய ஐ.தே.கட்சியின் தேசிய ரீதியில் பேசப்பட்ட ஒரு உறுப்பினராகவும் பேருவலை பிரதேசத்தின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவராகவும் திகழ்கின்றார். ஐ.தே.கட்சி இரண்டாக பிளவு பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசா வழியில் அவரது புதல்வாரன சஜித் பிரேமதாசாவின் கரங்களை பலப்படுத்த பாடுபட்ட ஒருவராவார்.

பலமுறை அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும், சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து களுத்தறை மாவட்டத்திற்கு மாத்திரமன்றி தேசிய ரீதியாக சேவையற்றிய, தொடர்ந்து நாட்டில் இன, மத, நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை என்ற அர்ப்பணிப்போடு பாடுபட்டு வரும் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவராவார். நாட்டில் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று எல்லா இனத்தவர்களாலும் சமூகத்தவர்களாலும் அன்பாக நேசிக்கப்படுகின்ற சிறந்த அரசியல்வாதி இம்தியாஸ் பாகீர் மாகார் எனலாம்.

1994 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட கால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் நாடாளுமன்றத்தில் சிறப்பாக முறையில் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து ஆட்சியாளர்களின் கண்களை திறக்கச் செய்யும் ஒருசில உறுப்பினர்களையே நாடாளுமன்றத்தில் அவதானிக்க முடிகின்றது. 225 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானாலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று வந்தாலும் இரு தரப்பில் இருந்தும் மிகவும் ஆக்ரோசமான முறையில் ஒவ்வொரு சட்டமூல விவாதங்களின் போதும் சரியான முறையில் தகவல்களை திரட்டி ஆளமான தேடல்களை செய்து விடயங்களை முன்வைக்கும் அற்றல் உள்ளவர்களாக விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில உறுப்பினர்களை குறிப்பிடலாம்.

நான் 1994 ஆம் அண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரையில் ஒரு தசாப்த காலமாக நாடாளுமன்ற செய்தியாளராக இருந்த காலப்பகுதியில் அவதானித்த வகையில் என் மனதை கவர்ந்த முன்னாள் மற்றும் இந்னாள் அரசியல்வாதிகள் சிலர் உள்ளனர். அந்த வகையில் லக்ஷ்மன் கதிர்காமர், ஏசி.எஸ். ஹமீத், அநுர பண்டாரநாயக்காக, எம்.எச்.எம். அஷ்ரப், ஏ.எச்.எம். அஸ்வர், நீலன் திருச்செல்வம், இரா சம்பந்தன், ஆர் தெண்டமான, ஜோசொப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, டபிள்யு. ஜே.எம். லொகுபண்டார, தற்போதைய ஜனாதிபதியாக இருந்து வரும் அநுரகுமார திசாநாயக்கா, ரவுப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன், ரேனுகா ஹேரத், என்று பலரை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் இந்தியாஸ் பாகீர் மாகாருக்கு தனித்துவமான இடம் இருக்கின்றது.

இத்தகையவர்கள் ஒருபோதும் பாரராளுமன்றத்தில் காலத்தை வீனடிக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு சட்டமூலம், விடயதானம் தொடர்பான விவாதம் என்று நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் அறிவித்தல் செய்யப்பட்டவுடனே சரியான தகவல்களை கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் தேடி திரட்டி அழகான முறையில் முன்வைத்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு நாட்டு மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெறுவதாக அமைகின்றது.

அவ்வாற அடிப்படையில் இம்தியாஸ் பாகீர் மாகார் அவர்களால் கடந்த பல தசாப்தங்களாக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாடாளுமன்றத்தில் பிரசன் னமாகி ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளியிடப்படுகின்ற நூலாக ‘மனச்சாட்சி’ சிங்கள மொழியில் (ஹர்த சாக்சிய) என்ற நூல் அமைகின்றது. இந்த நூல் வெளியீடு இன்று 2025.06.25 ஆம் திகதி புதன் மாலை 4.15 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் அரசியலில் பிரவேசிக்கின்ற மற்றும் சமூக நலன்களில் அக்கரை கொண்டவர்களாக செயற்படுகின்ற அனைவரும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இவரது உரைகளை இவ்வாறான நூல்கள் மூலம் வாசிப்பதற்கு கிடைக்கின்ற வாய்ப்பு ஒவ்வொரு துடிப்பான உள்ளங்களையும் தேசப்பற்றும், மதப்பற்று, சமூக நலன், உள்நாட்டு, சர்வதேச விவகாரங்கள் என்று இன்னோரன்ன துறைகளின்பால் ஊக்கப்படுத்துவதாக அமைகின்றன என்றே சொல்லலாம்.

ஒருசில அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் வந்து ஊழல்களிலும், மோசடிகளிலும், அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு நாட்டில் மக்கள் மத்தியில் செல்வாக் கிழந்தவர்களாகவும் அவப் பெயருக்கும் இழிசொற்களுக்கும் ஆளாகி தூக்கி வீசப்பட்ட நிலையில் இம்தியாஸ் பாகீர் மாகார் போன்ற தூய்மையான அரசியலை முன்னெடுத்த மக்கள் பிரதிநிதிகள் மேலும் மேலும் உருவாக வேண்டும். அதற்கான வழிகாட்டல்களாகவும் முன்மாதிரியாகவும் அவரது உரைகளின் ‘மனச்சாட்சி’ சிங்கள மொழியிலான நூல் வெளியீடு அமைகின்றது.

(எம்.எஸ்.அமீர் ஹூசைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *