உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளரிடம் சீ.ஐ.டி விசாரணை

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் கைதிகளை அனுமதியின்றி விடுவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

துஷார உபுல்தெனியவின் இரண்டாவது சுற்று விசாரணை இதுவாகும். நேற்று முன்தினம் அவர் 05 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சில கைதிகளை சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக ஜனாதிபதி மன்னிப்பு, தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஜனாதிபதி செயலகம் அளித்த முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கைதி ஒருவரை அனுமதியின்றி விடுவித்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (8) கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (9) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்பபடுத்தப்படவுள்ளார்.

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முறையான அங்கீகாரம் இன்றி கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கக்கூடிய கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *