நாட்டில் தற்போது உப்பு மாபியா உருவாகி யுள்ளது; மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்
நாட்டில் 130 ரூபாவுக்கு விற்பனையான உப்பு பைக்கட் ஒன்றின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது. இறக்குமதி செய் யப்படும் உப்பு பைக்கட் ஒன்றை 150 ரூபாவுக்கு வழங்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் மக்கள் மீது பாரிய சுமையை சுமத்தியுள்ளதன் பின்னணியில் பாரிய உப்பு மாபியா இடம்பெற்று வருகிறது. இந்த மாபியாவின் பின்னால் அரசாங்கமும் இருப்ப தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கி ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) வியாழக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கும் நிலையில் புதன்கிழமை இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உப்பு இறக்குமதி செய்வதற்கு முன்னரே அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டுள்ளது. அதன் பின்னரே தனியார் துறைக்கு உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கி யிருப்பது தற்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் தெளிவாகிறது.
நாட்டில் தற்போது உப்பு மாபியா உருவாகி யுள்ளது. இதற்காக அரசாங்கத்துக்கு யாராவது உந்துசக்தியாக இருக்கிறார்களா? இது தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கெதிராகவே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு பாரியதொரு ஆணையை வழங்கியிருக்கின்றனர். ஒருசில தனியார் நிறுவனங்களின் முதலாளிமார், புத்தளத்தில் பங்குகளைப் பெற்றுக்கொண்டு அதில் பணிப்பாளர் சபையிலும் இருக்கின்றனர்.
இந்த நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுவதில் சரிபாதி உப்பு உற்பத்தி செய்யப்படும் பிரதேசம் புத்தளம். ஆனால், புத்தளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு இன்று சந்தையில் இல்லை. இது யாராவது திட்டமிட்டு செய்கிறார்களா என்பது தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும்.
இன்று 130 ரூபாவுக்கு இருந்த உப்பு பக்கெட் ஒன்றின் விலை 350 ரூபா வரை அதிகரித் துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பு பக்கெட் ஒன்றை 150 ரூபாவுக்கு வழங்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மக்கள் மீது பாரிய சுமையைச் சுமத்தியுள்ளதன் பின்னணியில் பாரிய உப்பு மாபியா இடம்பெற்று வருகிறது. நாட்டுக்குள் உப்பு மாபியா ஏற்படுவதற்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.
உப்பை உற்பத்தி செய்யும் புத்தளம் மக்கள் உப்பை இறக்குமதி செய்யுமாறு டிசம்பர் மாதத்தில் இருந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசாங்கம் அதனைச் செய்யாமல் உப்பு தட்டுப் பாடு அதிகரிக்கும்வரை இடமளித்து வந்தது. இதுவே அரிசி இறக்குமதியிலும் இடம்பெற்றது.
நாட்டில் இரண்டு இலட்சம் மெட்ரிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சரியாக அரைவாசி புத்தளத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அங்கு உற்பத்தி குறையும்போது அது தொடர்பில் ஆலோசனை தெரிவிப்பதற்குக்கூட அங்கு ஓர் அரச நிறுவனம் கூட இல்லை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறியதாலே இன்று பாரியளவில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நாட்டைச் சுற்றி கடல் இருந்தும் உப்பு இல்லாமல் போவதென்பது பாரிய பேரழிப்பாகும்.
மேலும் புத்தளத்தில் உப்பு உற்பத்தி மற்றும் வியாபார நடவடிக்கைகளில் இருந்து தங்களை அகற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சில காணிகளை அரசாங்கம் அபகரித்துக் கொண்டுள்ளதாகவும், தாங்கள் நீண்டகாலமாக இருந்துவந்த இந்தக் காணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் உப்பளச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இன அடிப்படையிலும் இந்த விடயங்கள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. இன ரீதியில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாதென்று பேசுகின்ற அரசாங்கம், புத்தளம் பிரதேச செயலகத்தினூடாக அரசாங்கம் கையகப்படுத்தியிருக்கும் காணியின் உரித்து பத்திரத்தை உப்பளங்களின் உறுப்பினர்களுக்கு கொடுப்பதன் மூலம் அந்தக் காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டும்’’ என்றார்.