உலகம்

உலககிலுள்ள அகதிகளுக்கு இடமளிக்க இந்தியா ஒன்றும் “தர்மசாலை” அல்ல; உயர் நீதிமன்றம் அதிரடி

140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கெனவே போராடி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் ‘தர்மசாலை’ (இலவச தங்குமிடம்) அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழரான சுபாஸ்கரன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டாா். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில், இவரை குற்றவாளி என அறிவித்து, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டில், சென்னை உயா் நீதிமன்றம் சுபாஸ்கரனின் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. இந்த 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் இந்தியாவில் இருக்கக் கூடாது; இலங்கைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி, சுபாஷ்கரனின் தண்டனை காலம் நடப்பு ஆண்டுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், சுபாஸ்கரனை நாடு கடத்தாமல் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்கக் கோரி தமிழக அரசிடம் அவரின் மனைவி கோரிக்கை மனு அளித்தாா். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கவில்லை. இதையடுத்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உச்ச நீதிமன்றத்தில் சுபாஸ்கரன் மேல்முறையீடு செய்துள்ளாா். இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ள அவா், நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் இந்தியாவிலேயே இருக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா்.

மூன்று வருடங்களாக அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நபர், இலங்கைக்குத் திரும்பினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முறையான விசாவில் தான் இந்தியா வந்ததாகவும், தனது மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது இந்தியாவில் ‘குடியேறிவிட்டனர்’ என்றும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்கக் கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்குச் செல்லுங்கள்.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *