மின் கட்டணத்தை 18.3 வீதம் அதிகரிக்க மின்சார சபை யோசனை
செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 18 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் இடைக்கால நிதி அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டள்ளது.
2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளுக்கு லாபம் ஈட்டிய பின்னர், பதிவான முதல் இழப்பீடு இதுவெனவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 44 வீதம் வருவாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய இந்த வருடம் ஜனவரி 17 ஆம் திகதி மின்சாரக் கட்டணக் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு 20% கட்டணக் குறைப்பு பொருந்தும்.
அடுத்த மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது, எரிசக்தி நிபுணர்கள் சுமார் 15% அதிகரிப்பை எதிர்பார்க்கின்றனர்.