கற்பிட்டி பிரதேச சபையின் ஆட்சி அமைக்கும் முனைப்புடன் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி
கற்பிட்டி பிரதேச சபைக்கு 32 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த ஒரு தனிக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் தலா 10 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் ஏனைய சிறு கட்சிகளின் ஆசனங்கள் சமமாக கூட்டு சேரும் பட்சத்தில் 16 க்கு 16 என்ற அடிப்படையில் சமனாக காணப்படும் நிலையில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் திருவுல சீட்டு அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதன்படி தேசிய மக்கள் சக்தி 08 வட்டாரங்களில் வெற்றி பெற்று இரு இரட்டை உறுப்பினர் வட்டாரங்கள் உள்ளடங்களாக( 16 709 வாக்குகள்) 10 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 06 வட்டாரங்களில் வெற்றி பெற்று ( 18 114 வாக்குகள்) 04 போனஸ் உறுப்பினர்களுடன்l 10 உறுப்பினர்களையும் இலங்கை பொதுஜன பெரமுன ஒரு வட்டாரத்தில் வெற்றி பெற்று 02 போனஸ் உறுப்பினர்களுடன் (4 807 வாக்குகள்) 03 உறுப்பினர்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களில் வெற்றி பெற்று ( 4 161 வாக்குகள்) 02 உறுப்பினர்களையும் பொதுஜன ஐக்கிய முன்னணி ( 2 527 வாக்குகள்) 02 போனஸ் உறுப்பினர்களையும் சர்வஜன அதிகாரம் ( 3 003 வாக்குகள்) 02 போனஸ் உறுப்பினர்களையும் ஐக்கிய தேசிய கட்சி ( 1 939 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( 1 443 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் சுயேட்சை குழு ( 2 011 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் பெற்றுள்ளது.
இவ்வாறான நிலையில் தேசிய மக்கள் சக்தி யும் ஐக்கிய மக்கள் சக்தி யும் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவரும் நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு ஆளும் அரச தரப்பினர் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையே காணப்படுகிறது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)