முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மேற்பார்வையில் கொழும்பில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கு; இரண்டாயிரத்து மேற்பட்டோர் பங்கேற்பு
இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம், பொறுப்புணர்வு, மற்றும் நடுநிலைமை பேணல் என்ற அடிப்படைகளை மையமாகக் கொண்ட கல்விக் கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வுகள் (15) வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் அனுசரனையுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்தக் கல்விக் கருத்தரங்குகளின் இறுதி நாள் நிகழ்வில் சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இக்கல்விக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண அமர்வு (14) புதன்கிழமை விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்திலும் இறுதி நாள் நிகழ்வு கொழும்பு டவர் மண்டபத்திலும் இடம்பெற்றன.
அங்குரார்பண அமர்வில் சவூதி அரேபியாவின் கலாசார அமைச்சின் ரியாத் பிரிவிற்குப் பொறுப்பாகவுள்ள முஹம்மத் பின் சுலைமான் அல் புரைஹ் சிறப்புரையாற்றியதோடு, இறுதிநாள் நிகழ்வில் முஹம்மட் பின்த் ஹசன் அல்-செஹ்ரி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வுகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உட்பட திணைக்களத்தின் உயரதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பு வட பிராந்திய அரபுக் கல்லூரியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட
2000க்கு மேற்பட்ட
உலமாக்கள், புத்திஜீவிகள், அரச உயர் அதிகாரிகள் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் உஸ்தாத்மார்கள், உயர் தர மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்குபற்றி இதன்மூலம் நன்மையடைந்தனர்.
விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் (14) புதன்கிழமை இரண்டு அமர்வுகளும் (15) வியாழக்கிழமை டவர் மண்டபத்தில் மேலும் இரண்டு அமர்வுகளுமாக இரண்டு நாட்களும் 4 அமர்வுகள் இடம்பெற்றன.
இறுதிநாள் நிகழ்வில், சிறப்புரையாற்றிய முஹம்மட் பின்த் ஹசன் அல்-செஹ்ரி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்ள் திணைக்களத்தினால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
சவூதி அரேபிய அரசின் பூரண அனுசரணையில் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்ள் திணைக்களத்தினால் சவூதி அரேபிய மன்னர் உட்பட்ட சவூதி அரேபிய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.











(எம்.எஸ்.எம்.ஸாகிர்)