இலங்கை மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரவாய்ப்பளித்துள்ள சவுதி பல்கலைக்கழங்கள்; புலமைப்பரிசில்கள் ஊடாக300 மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு
பல்கலைககழகங்களில் நடத்தப்படும் கண்காட்சிகளில்
இலங்கையை சவுதிக்கும் உலக நாடுகளுக்கும்
அறிமுகப்படுத்த சந்தர்ப்பம்


பேட்டி கண்டவர்: அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் மதனி,
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு.
சவுதி அரேபியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரவும் பட்டங்கள் பெறவும் சவுதி அளிக்கும் வசதிகள், வாய்ப்புகள் மற்றும் புலமைப் பரிசில்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவுகள் குறித்து ரியாத் அல் இமாம் முஹம்மத் பின் சஊத் அல் இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று கலாநிதிப் பட்டம் பெற்ற மாவனல்லை, ஹெம்மாதகமையைச் சேர்ந்த அஷ்ஷைக் ரிஸ்மியுடன் மேற்கொள்ளப்பட்ட விஷேட நேர்காணல் இது.
கேள்வி: அல் இமாம் முஹம்மத் பின் சஊத் அல் இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள நீங்கள் உங்களைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?
பதில்: ஆம். ஹெம்மாதகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் எமதூரின் அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். அதனைத் தொடர்ந்து அக்குரணை ஜாமிஉர் ரஹ்மானியா அரபுக் கல்லூரியில் இணைந்து அல் குர்ஆனை மனனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டதோடு, காலி, இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இணைந்து கற்று மெளலவிப் பட்டம் பெற்றேன். அதன் பின்னர் சவுதியின் அல் இமாம் பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வியைக் கற்று இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளேன்.
இதேவேளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளரும், மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் முன்னணி சமூக சேவையாளருமான மர்ஹும் எம்.எம்.ஏ முபாரக் மதனீயின் புதல்வியைத் திருமணம் முடிந்து வாழ்கிறேன்.

கேள்வி: அல் இமாம் முஹம்மத் பின் சஊத் அல் இஸ்லாமியா பல்கலைக்கழகம் குறித்து கூறுங்கள்?
பதில்: 1953 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ஆரமபம் முதல் சவுதி அரேபிய மாணவர்களுக்கு மாத்திரமல்லாமல் வௌிநாட்டு மாணவர்களுக்கும் உயர் கல்வியை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி முன்னெடுத்து வருகிறது. இங்கு உயர்கல்வியைத் தொடர புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகிறது.
தற்போது இப்பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு துறைகளிலும் சுமார் 2000 மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்களவில் இலங்கை மாணவர்களும் உள்ளனர்.
இப்பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மாத்திரமல்லாமல் உயர்கல்வியும் சர்வதேச தரத்திலானதாகும். அதன் விளைவாகவே இங்கு உயர்கல்வி பெற்ற மாணவர்கள் பலர், அவரவர் நாட்டில் அமைச்சர்களாகவும் பல்கலைக்கழக உபவேந்தர்களாகவும் பேராசிரியர்களாகவும் பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர்களாகவும் இருக்கின்றனர். குறிப்பாக இப்பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்ற பலர் மாலைதீவு நாட்டில் அமைச்சர்களாகவும் உள்ளனர்.
அத்தோடு தலைசிறந்த மார்க்க மேதைகள் உருவாகும் பல்கலைக்கழகமாகவும் திகழும் இப்பல்கலைக்கழகம், இலங்கையின் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவில் அங்கீகாரம் பெற்றுள்ள வெளிநாட்டு பல்லைக்கழகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் கற்று பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக எனக்குள் இருந்தது. இந்தப் பின்னணியில் இலங்கையில் நான் பெற்ற கல்விச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு இப்பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தேன். என்னுடைய தகுதிக்கு ஏற்ப இப்பல்கலையில் உயர்கல்வித் தொடரும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன்.
கேள்வி: நானும் சவுதி அரேபியாவின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்று பட்டம் பெற்றவன் என்ற வகையில் சவுதியில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதை அறிவோம். அந்த வகையில் உயர்கல்விக்காக புலமைப்பரிசில்கள் வழங்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் யாவை? அந்த பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இலங்கை மாணவர்கள் கல்வி கற்கின்றனரா?
பதில்: சவுதியில் நிறைய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றில் இலங்கை மாணவர்கள் உட்பட வௌிநாட்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பெற்று உயர்கல்வி பெறுகின்றனர். குறிப்பாக அல் இமாம் பல்கலைக்கழகம், மன்னர் சஊத் பல்கலைக்கழகம், மன்னர் பஹ்த் பல்கலைக்கழகம், அமீரா நூரா பல்கலைக்கழகம், அல் கஸீம் பல்கலைக்கழகம், அல் மஜ்மஆ பல்கலைக்கழகம், மதீனா இஸ்லாமியா பல்கலைக்கழகம், நஜ்ரான் பல்கலைக்கழகம், தாயிப் பல்கலைக்கழகம், தபூக் பல்கலைக்கழகம், மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகம், ஜித்தா மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகம், மதீனா தைபா பல்கலைக்கழகம், அப்ஹா பல்கலைக்கழகம், அல் கர்ஜ் பல்கலைக்கழகம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.
இவற்றைவிடவும், இரு புனித பள்ளிவாசல்களான மக்கா ஹரம் ஷரீப் மற்றும் மதீனா மஸ்ஜிதுன் நபவி ஆகிய இரு பள்ளிவாசல்களிலும் உயர்கல்விப் பீடங்கள் அமைக்கப்பட்டு அவற்றிலும் வௌிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பெறக்கூடிய வகையில் புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்புக்களின் ஊடாக சவுதியிலுள்ள பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் சுமார் 300 பேர் தற்போது உயர்கல்வி பெற்றுக் கொண்டுள்ளனர்.
கேள்வி: சவுதியிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்று பெற்றுக்கொள்ளும் பட்டங்களுக்கு உரிய அந்தஸ்து குறித்து குறிப்பிடுவதாயின்?
பதில்: சவுதியிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்று பெற்றுக் கொள்ளும் பட்டங்கள் இலங்கையிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டங்களுக்குரிய அந்தஸ்தைப் பெற்றவையாக விளங்குகின்றன. குறிப்பாக இந்நாட்டின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, ஏனைய நாடுகளது பல்கலைக்கழகப் பட்டங்களைப் போன்று சவுதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டங்களையும் அங்கீகரித்துள்ளன.
அந்த வகையில் சவுதி பல்கலைக்கழகங்களில் கற்று பட்டம் பெற்றவர்கள் பலர் இந்நாட்டில் உயர் பதவிகளைப் பெற்றுள்ளனர். சவுதி பல்லைக்கழகங்களில் கற்று பட்டம் பெற்றவர்கள் உலகின் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் உப வேந்தர்களாகவும் இருக்கின்றனர். அத்தோடு இன்னும் பல்துறைகளிலும் பணியாற்றுகின்றனர்.
கேள்வி: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்கும் இந்நாட்டு மாணவர்களில் சிலர், தங்களது செலவுகளுக்கென சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகைய நிலைமை சவுதி பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பைப் தொடரும் மாணவர்களுக்கும் உள்ளதா?
பதில்: சவுதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பொருளியல், தொழில்நுட்பம், மொழித்துறை, ஷரிஆ, கணனித்துறை, பெற்றோலிய விஞ்ஞானம், வணிகம், உளவியல், ஊடகவியல் உள்ளிட்ட பல துறைகளிலும் உயர்கல்வியைத் தொடர புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சவுதியில் உயர்கல்வியைத் தொடர புலமைப்பரிசில் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மாணவரும் பல வகையான சலுகைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
குறிப்பாக புலமைப் பரிசில் பெற்று பல்கலைக்கழக பிரவேசம் பெற்றது முதல் கல்வியை நிறைவு செய்யும் வரையும் வருடா வருடம் தங்களது சொந்த நாட்டுக்கு சென்று வர இரு வழி விமான டிக்கட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தங்குமிட வசதிகள், மருத்துவ வசதி என்பன மாத்திரமல்லாமல் மாணவர்களது கைச்செலவுக்காக மாதாந்தம் கொடுப்பனவுகளும் இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. உயர்கல்வி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
அதனால் இப்பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்று வெளியேறும் அனைத்து மாணவர்களும் என்றும் சவுதிக்கு நன்றிக்கடன் உணர்வோடு செயற்படுகின்றனர். சவுதியின் இந்த அளப்பரிய நற்பணி மக்களால் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.
கேள்வி: அது சரி. நீங்கள் கல்வி பெற்ற இப்பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் வருடாவருடம் இந்நாட்டை சவுதிக்கும் வெளிநாடுகளுக்கும் அறிமுகப்படுத்தும் கண்காட்சிகளை நடத்துகின்றரே?
பதில்: ஆம். நான் கல்வி கற்கும் காலத்திலும் இத்தகைய கண்காட்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளோம். மதநல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகவாழ்வு என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தினால் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதில் இலங்கை மாணவர்களாகிய நாம் எமது நாட்டின் சமய, கலாசார விழுமியங்களையும், மத நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வெளிப்படுத்தக்கூடிய நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துகிறோம். சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் நாம் ஏற்பாடு செய்யும் இக்கண்காட்சியில் இலங்கையைப் பற்றியும் இந்நாட்டின் பொருளாதாரம், பாரம்பரிய உணவு, ஆடைப் பழக்க வழக்கங்கள், சுற்றுலா தலங்கள் உட்பட பல விடயங்களையும் உள்ளடக்குகின்றோம்.
இலங்கையானது மத்திய கிழக்கில் வாழும் அரேபியர்கள் உட்பட உலக மக்களைக் கவரும் அழகியதோர் சிறிய தீவு நாடாகும். அனைவராலும் வியர்ந்து பார்க்கப்படும் எழில்மிகு இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. நாலா பக்கமும் கடலும் காடுகளும் விவசாய நிலங்களும் சூழப்பட்டு எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கிறது. இவற்றையும் இக்கண்காட்சிகளில் சேர்த்துக் கொள்கிறோம். இலங்கையையும் இந்நாட்டின் சமய, கலாசார விழுமியங்களையும் வெளிநாட்டினர் அறிந்து தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படும் எமது கண்காட்சி சவுதி அரேபிய மாணவர்கள் உட்பட உலகின் பல நாடுகளது மாணவர்களாலும் வியந்து பாராட்டப்படுகின்றன.
இந்தப் பின்புலத்தில் மத்திய கிழக்கு அரேபியர்களின் குறிப்பாக சவுதி அரேபிய மக்கள் இலங்கையை அறிந்து தெரிந்து கொள்ளவும் இந்நாட்டின் சுற்றுலா பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பதற்கும் எமது கண்காட்சி பெரிதும் உதவக்கூடியனவாக அமைகின்றன.
கேள்வி: இலங்கை மாணவர்களும் தங்கள் நாட்டு பல்கலைககழகங்களில் உயர்கல்வியைத் தொடர புலமைப்பரிசில் வழங்கி ஊக்குவித்து வருகின்ற சவுதிக்கும் இந்நாட்டுக்கும் இடையிலான நட்புறவு தொடர்பில் குறிப்பிடுவதாயின்?
பதில்: இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர நட்புறவு ஐம்பது வருடங்களை அண்மையில் நிறைவு செய்துள்ளது. இதுதொடர்பில் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் விஷேட வைபவம் கூட கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படிருக்கிறது.
ஆனால் 50 வருடங்களுக்கு முன்பிருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட கால நட்புறவு நிலவிவருகிறது. இந்தப் பின்னணியில் இலங்கையின் சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக பல்வேறு உதவி ஒத்துழைப்புகளையும் சவுதி அரேபியா நல்கிவருகிறது.
குறிப்பாக வீதிகள், பாலங்கள் மற்றும் வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பன மாத்திரமல்லாமல் மனிதாபிமானத்தில் உலகையே வென்ற ஒரு நாடாக விளங்கும் சவுதி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் தவறியதில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியது. அத்தோடு நோன்பு காலத்தின் பாவனைக்கென வருடாவருடம் தொன் கணக்கில் பேரீச்சம் பழம் வழங்கப்படுதல், விழிவெண்படல சத்திர சிகிச்சை உள்ளிட்ட கண் சிகிச்சை முகாம்கள் இலவசமாக நடத்துதல், குர்ஆன் மனனப் போட்டிகளை தேசிய மட்டத்தில் நடத்தப்படுதல் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.
கேள்வி: அமைதி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதில் எப்பொழுதும் முன்னணியில் நிற்கும் நாடுகளில் ஒன்றான சவுதியில் நீண்ட காலம் கல்வி கற்று பட்டம் பெற்ற நீங்கள் அவை தொடர்பில் சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?
பதில்: நிச்சயமாக. சவுதியின் அடிப்படைக் கொள்கையே அமைதி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகிப்புத் தன்மையாகும். அதற்காக பல மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் சவுதியிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறது. அத்தோடு இத்தகைய மாநாடுகளும் கருத்தரங்குகளும் சவுதியின் பல்கலைகழகங்களிலும் கூட அடிக்கடி நடத்தப்படுகிறது. சவுதி இஸ்லாமிய விவகார அமைச்சின் முக்கிய பணிகளில் அதுவும் ஒன்றாகும்.
இதேவேளை பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் சவுதியில் அணுவளவுகூட இடம் கிடையாது. இஸ்லாத்தின் கொள்கையும் அதுவேயாகும். அதனால் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்தி ஒழித்துக்கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எல்லா மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தினதும் தீவிரவாதத்தினதும் தீங்குகள், பாதிப்புக்கள், தாக்கங்கள், அழிவுகளை தெளிவுபடுத்தி அறிவூட்டவென மாநாடுகளும் கருத்தரங்குகளும் மாத்திரமல்லாமல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் பயனாகவே பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நாடாக சவுதி விளங்குகிறது. அமைதி, சமாதானம், நல்லிணக்கம் தலைத்தோங்கும் நாடாகத் திகழுகிறது சவுதி. அத்தோடு இன, மத, நாடு வேறுபாடுகளின்றி தேவைகள் மிக்க நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் முன்னணி மிக்க தேசமாகவும் திகழுகிறது சவுதி. தற்போது இடம்பெறும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அதிசிரத்தை எடுத்துக் கொண்ட நாடாகவும் சவுதி உள்ளது.
கேள்வி: நிறைவாக நீங்கள் கூற விரும்புவதென்ன?
பதில்: சவுதி அரேபியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதில் இந்நாட்டு மாணவர்கள் கூடுதல் ஆர்வமும் அக்கரையும் காட்ட வேண்டும். அது அவர்களுக்கும் கல்வி மேம்பாட்டுக்கும் அளிக்கும் பாரிய பங்களிப்பாக அமையும்.
அதேநேரம் பேட்டி காணும் நீங்கள் உட்பட இந்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் சவுதி பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே உயர்கல்வி பெற்றுள்ளனர். நான், நீங்கள் உட்பட அனைவரும் இதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்த தாய்நாட்டுக்கும் சவுதிக்கும் என்றும் நன்றிக்கடன்பட்டவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக சவுதி அரேபியாவை ஆட்சி செய்த மன்னர்கள் உலக மக்களுக்கு உயர்கல்வி பெற வாய்ப்பளித்தது போன்று தற்போதைய இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத், சவுதி இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் ஆகிய இருவரும் கூட இம்மகத்தான பணிகளை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டவர்களாவர். அவர்களது மக்களுக்கான மகத்தான பணிகள் என்றும் நீடிக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.

