பாகிஸ்தான் உண்மையான நண்பன், என்றும் துணை நிற்போம்; துருக்கி ஜனாதிபதி எர்துகான்
இந்தியாவின் ‘ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைப் பாராட்டி எர்டோகன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
எர்டோகன் தனது அறிக்கையில், “எனது அன்பு நண்பர் ஷெபாஸ் ஷெரீப் அவர்களே, துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும். உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகைய உறவை பேணுகின்றன. துருக்கியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் விரும்புவது போல, பாகிஸ்தானிலும் அதை விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
சர்ச்சைகளைத் தீர்ப்பதில் பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொள்கையைப் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் “கடந்த காலங்களில் நல்ல மற்றும் கெட்ட காலங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நாங்கள் நின்றது போல, எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்போம். பாகிஸ்தான்-துருக்கி நட்புறவு நீடூழி வாழ்க!” என்று எர்டோகன் தெரிவித்தார்.