இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதிரடி முடிவுகள்; ஜனாதிபதி அனுர குமார
அரசாங்கம் விரைவாக செயற்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசாங்கத்தின் விரைவுத் தன்மையை இன்னும் இரண்டு வாரத்துக்குள் தெரிந்துக் கொள்ளாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
152 உள்ளூராட்சி மன்ற அதிகாரசபைகளில் எதிர்வரும் 2 ஆம் திகதி ஆட்சியமைப்போம். மிகுதி 115 உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.மக்களாணை எம்மிடமே உள்ளது .மக்களாணைக்கு தடையேற்படுத்தினால் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் புதன்கிழமை (14) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆண்டு விழா நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மனசாட்சிக்கு அமைய செயற்படுவோம் என்பதை மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். மனசாட்சியுடன் செயற்படுவதற்கு அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மனசாட்சியுடன் செயற்படுவது எமது கட்சியின் பிரதான கொள்கையாகும்.இதனை நாங்கள் என்றும் பாதுகாப்போம்.
கடந்து வந்த 60 ஆண்டுகால பயணத்தில் அரசியல் ரீதியில் அரச அதிகாரங்களால் வஞ்சிக்கப்பட்டோம். எமது உறுதியான செயற்பாட்டினால் தான் பலமான மற்றும் பாரம்பரியமான அரசியல் கட்சிகளை தோற்கடித்து ஆட்சியமைத்துள்ளோம். தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை எமக்கு உண்டு. ஏனெனில் நாங்கள் அடிமட்டத்தில் இருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம்.
அரசாங்கத்துக்கு எதிரான தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க எதிர்க்கட்சிகள் கடந்த 7 மாதகாலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன .அந்த முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்த நிலையில் தற்போது அழுகிறார்கள். அரசாங்கத்தை அடுத்த ஆண்டு கைப்பற்றுவதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
அரசாங்கத்துக்கு எதிராக பலமான அரசியல் செயற்பாடு ஏதும் கிடையாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். அரசாங்கம் விரைவாக செயற்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசாங்கத்தின் விரைவுத் தன்மையை இன்னும் இரண்டு வாரத்துக்குள் தெரிந்துக் கொள்ளாம்.
உள்ளுராட்சிமன்ற சபைத் தேர்தலில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தேர்தலின் பெறுவேற்றை நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட முடியாது. தேர்தல் முறைமைக்கு அமைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி 152 உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைப்போம். மிகுதி 115 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.மக்களாணை எம்மிடமே உள்ளது . மக்களாணைக்கு தடையேற்படுத்தினால் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.