உலகம்

மோதலில் எமக்கே வெற்றி, தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டால் பாகிஸ்தான் அழிக்கப்படும்; நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை அழித்து ஒழித்த இந்திய ராணுவத்தினருக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, பாகிஸ்தானிய பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட எண்ணிய மத்திய அரசு, அந்நாட்டின் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதை எதிர்த்து பாகிஸ்தான், இந்திய குடியிருப்பு பகுதிகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சித்தது. அதை நமது ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்களை குறி வைத்தும் இந்தியா தாக்கியது. இதில் பலத்த சேதத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான், தன் நாட்டு ராணுவ டி.ஜி.எம்.ஓ., அதிகாரியை இந்தியாவுடன் பேச வைத்தது. போர் நிறுத்தம் செய்து கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடுத்தது.

பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்தல் என்ற தன் இலக்குகள் நிறைவேறிய நிலையில், இந்தியா போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்துார் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் விளக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“ராணுவ வீரர்கள், உளவுத்துறைக்கு தலைவணங்குகிறேன். தீரமிக்க ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு வீரவணக்கம். இந்தியாவின் ராணுவ பலத்தை கடந்த சில நாட்களாக காட்டி வருகிறோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய தாய்மார்களுக்கு சகோதரிகளுக்கு மகள்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இக்கட்டான காலத்தில் நமது ஒற்றுமையையும், அமைதியையும் காண முடிந்தது. பஹல்காம் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட முறையில் எனக்கு மனவலியை தந்தது. கருணை இல்லாமல் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் கொன்றனர். இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கினோம் ஆபரேஷன் சிந்தூர் என்பது பெயர் மட்டும் அல்ல; நமது உணர்வுகள்.ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை”

நாட்டின் பலம், ராணுவ வீரர்கள் பலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. நாம் என்ன செய்வோம் என்று உலகமே கண்டு விட்டது. நமது ராணுவ வீரர்களுக்கும், உளவுத்துறையினருக்கும், ஆயுதங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் எனது வணக்கங்கள். ஆபரேஷன் சிந்துாருக்கு ஆதரவாக நின்ற மக்களுக்கு நன்றி.

பஹல்காமில், துளியும் கருணை இல்லாமல் குடும்பத்தினர், குழந்தைகள் கண் முன்னே குடும்ப தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், என்னை மனதளவில் மிகவும் வேதனைக்கு ஆளாக்கியது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, ஒட்டு மொத்த நாட்டு மக்களும், பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்றனர். பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டுவேன் என்று நான் உறுதி அளித்தேன்.

அதன்படி இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. பெண்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இன்று பயங்கரவாதிகள் உணர்ந்துள்ளனர். அந்தளவுக்கு நாம் துல்லிய தாக்குதல் நடத்தி இருக்கிறோம். இத்தகைய தாக்குதலை நாம் நடத்துவோம் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சிந்துார் நடவடிக்கை மூலம், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.பயங்கரவாத முகாம்கள் துடைத்து எறியப்படுவதை நமது ராணுவம் உறுதி செய்துள்ளது.

சிந்துார் என்பது பெயர் மட்டுமல்ல;
பயங்கரவாத முகாம்கள் பகாவல்பூர், முரித்கேவில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் இந்த முகாம்களுக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது.

தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒரே நேரத்தில் நிகழ்த்த முடியாது. அதேபோல் தான் தீவிரவாத்தையும் வணிகத்தையும் ஒரே நேரத்தில் நிகழ்த்த முடியாது. பாகிஸ்தான் உயிர்த்திருக்க வேண்டுமென்றால் தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுமானால் தீவிரவாதம், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே நிகழும். இது போருக்கான காலமல்ல; அதே நேரத்தில் தீவிரவாத செயல்களுக்கான காலமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வளர்ந்த இந்தியா என்ற கனவு நிச்சயம் நிகழும்; அதற்கான வலிமையை இந்தியா நிகழ்த்திக் காட்டியுள்ளது ”

தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு பதிலாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டது பாகிஸ்தான். இந்தியாவின் கடுமையான நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்து போனது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள், ராணுவ தளங்கள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான கொள்கையாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இருக்கும். தாக்குதலுக்கு இந்தியாவின் முப்படைகள் எப்போதும் தயாராகவே இருக்கும். அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது.பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் செயல்படும் தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் பிரித்துப் பார்க்க மாட்டோம். பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலக அரங்குக்கு நாம் தெரியப்படுத்தினோம். இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி மரியாதை நிகழ்வில் பாக். ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஒவ்வொருமுறையும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை புதிய மைல்கல். தீவிரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசும், ராணுவமும் செயல்பட்டால் ஒருநாள் அந்நாடு அழியும்” இவ்வாறு அவர் கூறினார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *