இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள உறவு தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருக்கிறது,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு கிடையாது; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள உறவு தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருக்கிறது
மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு கிடையாது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேட்டி
திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் மணிச்சுடர் நாளிதழின் மூத்த ஊடகவியலாளர் எம். கே. ஷாகுல் ஹமீது தங்கச்சி மகன் திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம், வருகை தந்தார்.பின்னர் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்தார் அப்போது கூகூறியதாவது
கேள்வி: இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள்… இந்தியா – பாகிஸ்தான் போர் தொடங்கியிருக்கும் நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: எமது அரசாங்கம் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. பிராந்தியத்தில் உள்ள இரண்டு நேச நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள இந்தப் போரில், அணிசேரா நிலையைக் கடைப்பிடிப்பது என்பதே அந்த முடிவு. இதில் ஒரு பக்க சார்பாக எதையும் நாங்கள் பேசும் நிலையில் இல்லை எனும் பொருள்பட எங்களது அதிபர் ஓர் அறிக்கையை விட்டிருக்கிறார். அதுதான் எங்களுடைய கருத்தும்.
நாங்கள் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நாட்டின் வெளியுறவு கொள்கை உள்ளிட்ட பொதுவான நிலைப்பாடுகளில் நாங்கள் மாற்றுக் கருத்தில் இருக்க விரும்பவில்லை.
கேள்வி: பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் இது என்பதால், இதில் பொதுமக்களைத் தாக்குவதற்கு வாய்ப்பில்லை… பயங்கரவாதிகள் மட்டுமே இதில் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தானுடைய தாக்குதலால் இந்திய பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றும் இந்திய அரசு கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: பயங்கரவாதத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை என்ற அடிப்படையில், பயங்கரவாதததை அரசியலுக்காகப் பயன்படுத்தும் எந்தத் தரப்போடும் நாங்கள் உடன்படப் போவதில்லை. அதற்கு ஆதரவு அளிக்கப்போவதும் இல்லை. இதுதான் எங்களது பொதுவான நிலைப்பாடு.
இதுபோக, பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் – எடுத்த எடுப்பிலேயே ஒரு தரப்பைக் குற்றப்பாட்டுவதற்கு முன்பு, அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பது நல்லது. அந்த நோக்கில் முதலில் அது குறித்து தீர விசாரிக்கப்பட வேண்டும்.
கேள்வி: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கான தீர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: எங்களைப் பொருத்த வரையில் இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை இது என்பதால், இயன்ற வரை இரு தரப்பிடையேயும் சமுகமாகப் பேசி பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதே சரியானதாக இருக்கும். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பு என்பது மிகவும் குறுகிய அளவிலானதாகும். இங்குள்ள மீன்வளம் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். இருநாட்டு மீனவர்களும் மீன் வளர்த்து சரியான முறையில் அனுபவிப்பதற்கான முறைப்படியான திட்டமிடல் இருக்க வேண்டும்.
அந்த அடிப்படையில், கடலின் அடியாழம் வரை சென்று, மீன்வளத்தை முற்றிலுமாக வாரிச் சுருட்டி அள்ளிச் செல்லும் நிலை தடை செய்யப்பட்டிருக்கிறது. அதையும் மீறி அப்படியான சில செயல்பாடுகள் நடக்கிறது என்று இலங்கை தரப்பில் குற்றம் சொல்லப்படுகிறபோது, அவ்வப்போது சில படகுகள் பறிமுதலும் செய்யப்படுகின்றன. இந்தப் பிரச்சனை நீதிமன்றம் வரை செல்லும்போது, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் – இலங்கை மீனவர்களுக்கும் இடையில் அடிக்கடி வன்முறை நடைபெறுகிறது.
மொத்தத்தில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். இருநாட்டு மீனவர்களும் ஒற்றுமையுடன் தமது வாழ்வாதாரத்துக்கான மீன்வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மீனவர்களின் இந்த வாழ்வாதாரப் பிரச்சனையில் துப்பாக்கிப் பயன்பாடு என்பது இரு நாடுகளுக்கும் இடையில்
தொடரும் உறவைச் சிக்கலாக்கும்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக பலமுறை பல காலகட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், இதுவரை நிரந்தரமான இணக்கம் எட்டப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது. என்னைப் பொருத்த வரை, இந்திய ஒன்றிய அரசின் மீன்பிடித்துறை நடத்தும் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சுடன் தீவிரமாகப் பேசி தீர்வுகள் எட்டப்பட வேண்டும். எங்கள் வடக்கு ஆளுநர் தரப்பிலும், தமிழ்நாடு அரசு தரப்பிலும் இது தொடர்ந்து பேசப்பட வேண்டிய முக்கியமான அம்சமாக இருக்கிறது.
இந்தப் பிரச்சினை நீடித்துக் கொண்டே செல்வதால், தமிழ்நாட்டிற்கும் – இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே இருந்து வரும் ஏனைய விவகாரங்களில் உள்ள உறவும் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது என்று நாங்கள் கவலை அடைகிறோம்.
கேள்வி: இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்காக, இலங்கை அரசின் சார்பில் இந்திய ஒன்றிய அரசை இதுவரை நீங்கள் எப்போதாவது அழைத்திருக்கிறீர்களா?
பதில்:.அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை வந்திருந்தபோது இந்த மீனவர் பிரச்சினை தொடர்பாக இருதரப்பும் தீவிரமாகப் பேசியிருக்கின்றன. மேல் நடவடிக்கைகளுக்குச் செல்வதற்கு முன், இன்னும் சில சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது குறித்தும் கதைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு தரப்புக்கும் இடையில் வணிகச் செயல்பாடுகள் தொடர்பாக நிரந்தர கூட்டு நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. அதற்குள் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனையும் உள்ளடக்கப்பட வேண்டும்; அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று நாங்களும் வெளிநாட்டு அமைச்சு சார்ந்த கலந்தாய்வுக் கூட்டங்களில் கருத்து தெரிவித்திருக்கிறோம்.
கேள்வி: இலங்கையில் உள்ளாட்சி சபைகளுக்குத் தேர்தல் நடந்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு ஆதரவான சூழல் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது?
பதில்: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குக் கிடைத்த பாரிய வெற்றியில் இருந்து பெரிய பின்னடைவை இந்தத் தேர்தல் மூலம் ஆளுங்கட்சி சந்தித்திருக்கிறது. குறிப்பாக ஊராட்சி சபைகளில் கனிசமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமரும் சூழலில் அது இருந்தாலும், ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் குறைவாகத்தான் தற்பொழுது பெற்றிருக்கிறது.
குறிப்பாக சிறுபான்மை பிரதேசங்களில் ஆளுங்கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கு அளவிலிருந்து இப்பொழுது மிகப்பெரிய வீழ்ச்சியை அது சந்தித்திருக்கிறது. இது சிறுபான்மை மக்களுக்கு இடையில், ஆளுங்கட்சியாளர்களுக்கு ஜனாதிபதி பொதுத் தேர்தலில் இருந்த ஆதரவில் பெரும் மாற்றம், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது காட்டுகிறது.
கேள்வி: இதற்கான காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்?
பதில்: எம் நாட்டின் சிறுபான்மை மக்களைப் பொருத்தமட்டில், ஆட்சியாளர்களது பெருந்தேசியவாத கோட்பாடுகளில் உண்மை நிலை வேண்டுமென்றே மறைக்கப்பட்டு, சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவருவதற்காக அவர்கள் போலி நாடகம் ஆடினார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இதன் காரணமாக, அவர்களுடைய வெளியுறவுக் கொள்கைகளிலும் ஏற்கனவே பெரிய வாய்ச்சவடால் அறிக்கைகளை எல்லாம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அவற்றையெல்லாம் மீறி, அதற்கு மாற்றமாக அரசாங்கம் நடந்து கொள்கிறது என்ற ஒரு கருத்து சிறுபான்மை மக்களிடையே இருந்து கொண்டிருக்கிறது. இது அவர்களுக்கு இருந்த செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதையே காண்பிக்கிறது.
அண்டை நாடுகளுக்கிடையே நடைபெறும் யுத்தத்தில் அணிசேரா நடுநிலை வகிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. பிராந்தியத்தில் இருக்கும் நேச நாடுகளுக்கிடையில் மூண்டிருக்கின்ற இந்த மொத்த யுத்தம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும்; சமாதானம் நிலவ வேண்டும் என்று எங்களது நாட்டின் அதிபர் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுவே எங்கள் அரசின் கொள்கையாக உள்ளது.
எங்கள் நாட்டில் இருந்து வெளியே செல்கின்ற அரசியல்வாதிகளாகிய நாங்கள் யாராக இருந்தாலும், நாட்டின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் அதே கருத்தில்தான் இருப்போம்.
கேள்வி: இந்தியாவும் – இலங்கையும் முழு நட்புறவில் உள்ளனவா?
பதில் : இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள உறவு தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறது. அண்மையில் கூட இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி வந்து, நிறைய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கிறார்.
குறிப்பாக, இலங்கை தலைமன்னாருக்கும் – இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் கடையில் நிலவழியில் நிரந்தரமான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற அபிலாஷை எங்களுக்கு நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசின் தரப்பில் அதற்கு ஆர்வம் காட்டப்பட்டாலும், இலங்கை அரசு அது குறித்து சரியான பதிலைத் தரவில்லை என்ற காரணத்தால் அந்த விஷயம் பின்தள்ளப்பட்டு இருக்கிறது. இது கவலைக்குரிய ஒன்றாகும்.
இலங்கையின் சிறுபான்மை மக்கள் என்ற அடிப்படையில் – தென்னிந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கிற தொடர்பு தமிழ்நாட்டிற்கும் – தமிழ் பேசும் இலங்கை பிரதேச மக்களுக்கும் இடையில் இந்தப் போக்குவரத்து அமைந்தால் இன்னும் அதிகரிக்கும்; உறவுகளும் வலுப்படும் என்பது மாத்திரமல்ல; வர்த்தக ரீதியான தொடர்புகளுக்கு வளர்ச்சி தரக்கூடியதாகவும் அது அமையும்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக வருவோரின் எண்ணிக்கை தற்காலத்தில் கனிசமான அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அதையும் இன்னும் பல மடங்கு கூட்டுவதற்கும் இந்த ஏற்பாடு வசதி வாய்ப்பை உருவாக்கித் தரும் என்ற காரணத்தால், இது தொடர்பில் நாங்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றோம்.
எனினும் இலங்கை அரசு இதில் சற்று சரியான பதிலைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தால், இப்படி ஒன்று அமையும் பொழுது அதனால் கிடைக்கப் போகிற பொருளாதார அணுகூலங்கள் அலாதியாக இருக்கும். இரு நாடுகளுக்கு இடையிலும் கடலுக்கு மேலால் பாளங்களை அமைப்பது என்பது, அதை இன்று செய்யத் தொடங்கினாலும் முழுமையாக நிறைவடைவதற்கு ஒரு பத்தாண்டுகளாவது எடுக்கும் என்கிறபோது, குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அப்படி அனுகூலங்கள் எதையும் அடைவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
கேள்வி: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதாகக் கூறப்படுகிறதே? இதற்கு என்றைக்காவது தீர்வு ஏற்படுமா?
பதில்: இதற்கான நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து இரு தரப்பினரும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பொருத்தமட்டில், இலங்கை கடற்படையினரோடு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தொடர்ந்து ஏற்படுகின்ற சர்ச்சைகள், அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச் சூடு போன்ற விவகாரங்களெல்லாம் மிகுந்த கவலைக்குரியன.
இருதரப்பும் பேசி இதற்கு முடிவு காணப்பட வேண்டும் என்று சொன்னாலும், இன்னும் அதற்கான சாத்தியம் உருவாகவில்லை. என்னைப் பொருத்தமட்டில் சர்வதேச ஆழ்கடல் மீன்பிடி உள்விவகாரங்களில் இருதரப்பும் மிகவும் குறுகிய ஒரு கடற்பரப்பில் அளவுக்கு அதிகமாக மீன்களைக் காவு கொள்ளப் போய், மீன் வளங்களும் பாதிக்கப்படுகிற நிலை காணப்படுகிறது.
எனவே இது தொடர்பாக விட்டுக் கொடுத்தல் அடிப்படையில் இரண்டு அரசுகளும் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இருதரப்புக்கும் அவர்களது கடல் எல்லையைத் தாண்டியும் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்குத் தேவையான வசதிகளை இருதரப்பிலும் செய்து கொடுப்பது இந்தப் பிரச்சினையை ஓரளவுக்கு தீர்க்கும் என்று நம்புகிறோம்.
கேள்வி: கச்சத்தீவு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு – இந்திய அரசும், இலங்கை அரசும் ஒரு பெரிய அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றன. கச்சத்தீவை காங்கிரஸ் இலங்கைக்குத் தாரைவார்த்து விட்டது என்று இப்பொழுது இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசு குற்றம் சாட்டி, அது தொடர்பான பேச்சுகள் நாட்டில் பரவலாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில்தான் இந்த கச்சத்தீவு குறித்து பெரிதாகப் பேசுகின்றார்கள். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: கச்சத்தீவு விவகாரம் 1970களில் இருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் விட்டுக் கொடுத்தல் மூலம் இலங்கையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என்று இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்த வரை அதை அரசியலுக்காக சர்ச்சைக்குரிய பிரச்சனையாக வெவ்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக தற்போதைய ஒன்றிய அரசைச் சார்ந்த கட்சியினர், மாநில அரசாங்கங்களுக்கு இடையில் இருக்கிற அரசியல் போட்டியின் காரணமாக இது தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையைப் பொருத்தமட்டில் கச்சத்தீவு விவகாரம் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஓர் அம்சம். குறிப்பாக, அண்மையில் கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற திருவிழாவில், இருதரப்பும் – குறிப்பாக இலங்கை கடற்பறையினரும், இந்தியர்களும் அங்கு வழிபட வந்த எல்லா இந்தியர்களுக்கும் எல்லா உபசாரங்களையும் செய்கிற ஒரு நிலை இருந்தது. இலங்கை அரசு அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து மிகவும் சுமூகமாக இந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளை முன்னின்று ஒற்றுமையாக கடத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
இது நல்லதொரு செய்கை. இருந்தாலும் அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சனை அடிக்கடி தேர்தல் காலங்களில் மட்டும் விவகாரமாகத் தூக்கிப் பிடிக்கப்படுவது சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாங்கள் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் சொல்வதற்கில்லை இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் நிறுவனர் சிராஜூதீன், சதக்கத்துல்லா, முகமது ரியாஜ், இமேஜ் சாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.



(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)