வரிகளைக் குறைக்க அமெரிக்கா, சீனா இணக்கம்
அமெரிக்காவும் சீனாவும் இன்று முதல் 90 நாட்களுக்கு பரஸ்பரம் பொருட்களின் மீதான வரிகளை பாரியளவில் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வார இறுதியில் இடம்பெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த திருப்புமுனை உலகளாவிய சந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாளை மறுதினத்திற்குள் அமெரிக்கா சீனப் பொருட்களின் மீதான வரிகளை தற்காலிகமாக 145% இலிருந்து 30% ஆகக் குறைக்கும் என்பதுடன் சீனா அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125% இலிருந்து 10% ஆகக் குறைக்கும் என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் மற்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் தலைமையில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்த விவாதங்களைத் தொடர ஒரு வழிமுறையை நிறுவவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதங்கள் சீனாவிலும் அமெரிக்காவிலும் அல்லது கட்சிகளின் உடன்படிக்கைக்கமைய மூன்றாவது நாட்டிலும் நடத்தப்படலாம். தேவைக்கேற்ப, இரு தரப்பினரும் தொடர்புடைய பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை நடத்தலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.