வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்; பிரதேச உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர்
நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றதேர்தலில் எனது வெற்றிக்கு முழுமையாக வாக்களித்த பிரதேச மக்கள், என்னோடு இரவு பகலாக உழைத்த ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள், கட்சிப்போராளிகள், என்னோடு போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் வேட்பாளர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வாழைச்சேனை பிரதேச உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்துள்ளார்
பல்வேறு விமர்சனங்கள், அபாண்டங்களையும் தாண்டி எனக்காக வாக்களித்த, ஆதரவளித்த உங்கள் அனைவரது எதிர்ப்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் உங்கள் ஆலோசனை, வழிகாட்டலுடன் கடந்த காலங்களில் என்னால் முன்னெடுத்த முடியுமான பணிகள் போன்று இம்முறையும் முன்னெடுப்பேன் எனத்தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது கடந்தகாலச்செயற்பாட்டுக்கு இரண்டாவது முறையும் பெருவாரியாக நீங்கள் அளித்துள்ள இவ்வெற்றியானது உங்களது வெற்றியாகும். எதிரணியினரால் பல்வேறு சவால்கள் இம்முறை இருந்த போதும் பலம்பொருந்திய அரசியல்வாதிகள் களத்தில் நின்று செயற்பட்ட போதும், அல்லாஹ்வின் உதவியுடனும் உங்களது பூரண ஆதரவுடனுமே இவ்வெற்றி சாத்தியமானது.
மீண்டும் நன்றி கூறி, இவ்வாய்ப்பினை கட்சியூடாக வழங்கிய கட்சியின் தேசியத்தலைமை அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் ஹாஜியார், கல்குடாத்தொகுதி அமைப்பாளர் ஹபீப் றிபான் மற்றும் கட்சியின் போராளிகள், ஆதரவாளர்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கின்றேன் எனத்தெரிவித்துள்ளார்.
(எஸ்.எம்.எம். முர்ஷித்)