உலகம்

இந்திய மற்றும் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு

இந்தியா – பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை கணிசமாக அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனக்குச் சொந்தமான சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டிய நேரம் என்பதை முழுமையாக அறிந்துகொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அசைக்க முடியாத தலைமைப்பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஏனெனில் இது பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்திருக்கக்கூடிய தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டிய நேரம் இது. மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம். உங்கள் துணிச்சலான செயல்களால் உங்கள் மரபு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிப்பேன்.

மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பது குறித்து நான் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்ததாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் நேற்று அறிவித்திருந்தார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் நடத்தப்பட்ட நீண்ட  பேச்சுவார்த்தைகளின் விளைவாக போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அறிவித்திருந்தார்.

போர் நிறுத்தம் நேற்று மாலை 05 மணிக்கு அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 08 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டால் பதில் தாக்குதல் மேற்கொள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்  மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *