உலகம்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நாளை திருச்சியில் ஆரம்பம்; இலங்கையிலிருந்து முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

மே -09, 10, 11 ஆகிய தேதிகளில் திருச்சியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு முஹம்மது அலி 07-05-2025 புதன்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
1973 ஆம் ஆண்டு திருச்சி யில் வைத்து தொடங்கப்பட்ட இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும். ஆரம்பிக்கப்பட்ட
50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பொன்விழா மாநாடாக வருகின்ற 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களில்
எம்.இ.டி. கல்லூரியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இஸ்லாமிய இலக்கியங்கள்
இஸ்லாமிய இலக்கியங்கள் என்றாலே ஓரிரு நூல்கள் தான் உள்ளன என்று அறியப்பட்டிருந்த புரிதலை முற்றிலுமாக மாற்றி, இரண் டாயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தையே சாரும். பல்வேறு பல்கலைக் கழகங்களில் இருக்கைகள் அறக் கட்டளைகள் நிறுவுவதற்கும், சமய நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதற்கும், மனித நேயத்தை தழைக்க செய்வதற்கும் இந்த இஸ்லாமிய இலக்கியக் கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
இப்பொழுது நடை பெற இருக்கக்கூடிய இந்த மாநாட் டின் கொள்கை முழக்கம் கூட இணைப்பே இலக்கியம் மனிதர்களை இணைப்பது மத நல்லிணக்கத்தை வளர்ப்பது மானுடத்தை தழைத்தோங்கச் செய்வது சமூக நீதியை நிலைநாட்டுவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த கொள்கை முழக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர்-கே.எம். காதர் மொகிதீன்
மாநாட்டின் முதல் நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. த. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேருரை ஆற்ற இருக்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் மாநாட்டு தொடக்க உரையை ஆற்றி சிறப்பிக்க விருக்கிறார்கள். மாநாட்டு மலரையும் ஆய்வு கோர்வை நூல்களையும் வெளியிட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த முதல் நாள் மாநாட்டில் தன் வாழ்நாள் முழுக்க சமுதாயத்திற்காக அர்ப்பணித்து செய்து வந்த செய்து வருகிற தொடர் சேவைகளை பாராட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்
கே.எம். காதர் மொகிதீன் அவர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய உமர் புலவர் விருதை வழங்கி கண்ணியப் படுத்த விருக்கிறோம். அதுபோல சென்னை மேனாள் துணைவேந்தரும் தலைசிறந்த கல்வியாளருமான சே.சாதிக் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன் கல்வி கோ எனும் விருதையும் வழங்க இருக்கிறோம்.

சமய நல்லிணக்க கருத்தரங்கம்
எஸ். பீட்டர் அல்போன்ஸ் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், அருட்திரு ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட பல் சமய பிரமுகர்களை வைத்து சமய நல்லிணக்க கருத்தரங்கத்தையும் முதல் நாள் மாநாட்டில் நடத்த விருக்கிறோம். அதனைத் தொடர்ந்து திமு. அப்துல் காதர் அவர்களின் தலைமையிலான கவியரங்கமும் நடைபெற இருக்கிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி தான் மாநாட்டின் முதுகெலும்பு. இதில் ஒரு மிகப்பெரிய ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. ஏறத்தாழ 200 தமிழறிஞர்கள் இந்த ஆய்வரங்கத்தில் பங்கேற்கின்றனர். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் கோவி. செழியன், சா.மு.நாசர் ஆகியோர் இந்த ஆய்வரங்கத்தை தொடங்கி வைக்கின்றனர்.

மொத்தம் பதினோரு அமர்வுகளில் 110 கட்டுரைகள் இந்த ஆய்வரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. இதனையொட்டி ஓர் அருங்காட்சியகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மூன்றாம் நாள் காலை நடைபெறும் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , அருமை சகோதரர் நாசர் அவர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து நடைபெறும் ஊடக அரங்கத்தில் புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் அனை வரும் பங்கேற்க இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நெல்லை முபாரக் இதில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மார்க்க அறிஞர்கள் அரங்கமும் மகளிர் கருத்தரங் கமும் மூன்றாம் நாள் நிகழ்ச்சி யில் நடைபெற விருக்கின்றன.
மாநாட்டின் நிறைவு விழா மூன்றாம் நாள் மாலையில் நடைபெறுகிறது அதில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் நிறைவு வாழ்த்துரை வழங்க, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் நிறைவு பேருரை ஆற்றவிருக்கிறார்.
இந்த மாநாட்டின் நெறியாளர்களாக நம்முடைய கண்ணியத்திற்குரிய தலைவர் அவர்களது தலைமையில் திமு. அப்துல் காதர், நீதி அரசர் ஜி.எம். அக்பர் அலி ஆகிய மூவரும் உரையாற்ற விருக்கிறார்கள். மாநாட்டின் அமைப்பாளராக இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவராக இருக்கும் சே.மு. முஹம்மது அலி ஆகிய நானும், பொதுச் செயலாளராக இருக்கும் பேராசிரியர்
மு.இ.அஹமது மரைக்காயர் அவர்களும், பொருளாளர் ஆகிய அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜகான் அவர்களும் உரையாற்றுகிறோம்.
எங்களுக்கு இந்த
எம்.ஐ.இ.டி. கல்லூரி வளா கத்தை மாநாடு நடத்துவதற்கு வசதி செய்து தந்து எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய அன்புச் சகோதரர் சிறந்த கல்வியாளர் பொறியாளர் எம்.ஐ.இ.டி. கல்வி குழுமத்தின் தலைவர் அல்ஹாஜ் முஹம்மது யூனுஸ் அவர்கள் வரவேற்பு குழு தலைவராக சேவையாற்றுவிருக்கிறார்கள்.

பல்வேறு அரிய அம்சங்களை தாங்கி நடை பெறும் இந்த மூன்று நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத் திலும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் யாவரும் முழுமையாக வந்து பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் அதன் நிகழ்வுகளை உங்களது ஊடகங்களில் செய்திகளாக வெளியிட்டு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும், நீங்கள் அளிக்கும் உற்சாகத்துடன் கூடிய ஒத்துழைப்புதான் எங்களை இதுபோன்ற பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு ஊக்கப்படுத்தும். இந்த மாநாட்டின் நோக்கமே இணைப்பே இலக்கியம் அதாவது இதயங்களை இணைப்பது தான். ஆக இந்த நோக்கத்தை முழுமையாக அடைந்திட ஊடக நண்பர் களாகிய நீங்களும் உங்களது பங்கை சிறப்பான முறையில் அளிக்க வேண்டும் என்பதை அன்புடன் வேண்டு கோளாக முன் வைக்கிறேன்.

முதல் நாள் தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இலங்கை முன்னாள் அமைச்சர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர், மலேசிய கல்வி வாரிய தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் ஆகிய பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருவாரியான அளவில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இசைவு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழை உங்கள் அனைவருக்கும் நாங்கள் இப்பொழுது தருகிறோம். அதை முழுமையாக நீங்கள் பார்த்தாலே இந்த மாநாட்டின் சிறப்புகள் என்ன என்று முழுமையாக தெரிந்துவிடும்
கேள்வி: இந்த மாநாட்டை ஒட்டி அரசுக்கு கோரிக்கை எதுவும் வைக்க விருக்கிறீர்களா?
பதில்: ஆம் சில முக்கிய மான கோரிக்கைகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் முதலில் நன்றி தெரிவிக்கிறோம். இஸ்லாம் மார்க்கத்தை புதிதாக தழுவிய சகோதரர்களுக்கு பி.சி.எம். எனும் வகுப்பின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படாத நிலை இருந்தது. இதன் காரணமாக அரசு போட்டித் தேர்வுகளை எழுதக்கூடியவர்கள் எல்லாம் மிகவும் அவதியுற்றனர். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் டிவாநசள என்ற தரத்தில் தனித்து வைக்கப் பட்டிருந்தார்கள். அந்த நிலையை மாற்றி அவர்களும் பிசிஎம் தான் என்று சட்டம் நிறைவேற்றி அவர்களின் நீண்ட நாள் பிரச்சனையை போக்கிய தமிழ்நாடு அரசுக்கு இந்த மாநாட்டில் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

அதுபோல சிறுபான்மை யினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அந்த நிறுவனங்கள் சிறுபான்மை நிறுவனங்கள் என்ற தரத்தை ஆண்டுதோறும் புதுப் பிக்க வேண்டி இருந்தது. அதை மாற்றி நிரந்தரமாக சிறு பான்மையின நிறுவனங்கள் தரத்தையும் இந்த திராவிட மாடல் அரசு தந்திருக்கிறது. அதற்காகவும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
அதுபோல கவிக்கோ அப்துல் ரகுமான் இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா மணவை முஸ்தபா ஆகியோரின் பிறந்த நாளை அந்தந்த மாவட்ட அளவில் அரசு விழாவாக நடத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம் பாராட்டுவிருக்கிறோம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என ஒன்றிய அரசால் ஒருதலைபட்சமாக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் மிகவும் வெளிப்படையாகவும் கடுமையாகவும் எதிர்த்து, தொடர்ந்து அதற்காக போராடி சிறுபான்மை மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு அதன் முதலமைச்சர். மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லிம் சமுதாயமே நன்றி தெரிவிக்கிறது என்ற தீர்மானத்தையும் நாங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றவிருக்கிறோம்.

இவை தவிர வேறு சில முக்கிய தீர்மானங்களும் இந்த மாநாட்டில் நிறைவேற் றப்பட உள்ளன. 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாவது மாநாட்டில் தான் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருந்த சிறுபான்மையினருக்கான
தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 3.5 சதவீதம் என்று இருக்கும் அந்த இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக அதிகரித்து தர நாங்கள் கோரிக்கை வைக்கவிருக்கிறோம். தந்தை வழியில் நின்று தற்போதைய முதலமைச்சர் தளபதியார் அவர்களும் அதை நிறைவேற்றி தருவார் என்று நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
சென்னையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளது. மதுரையில் டாக்டர் கலைஞர் அவர்களது பெயரால் நூலகம் இருக்கிறது. திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களது பெயரில் இருக்கிறது. அதே போல திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட விருக்கிற நூலகத்திற்கு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களது பெயரை சூட்ட வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறோம்.
இவை தவிர கல்வி ஆய்வு இருக்கைகள் நூலகங்கள் தொடர்பாக பல்வேறு கூடுதல் தீர்மானங்களையும் நிறைவேற்றவிருக்கிறோம்.
இவ்வாறு சே.மு.மு. முகமதலி பேசினார்.

பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் அஹமது மரைக்காயர், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொருளாளர் எஸ். எஸ். ஷாஜகான், திருச்சி எம். ஐ. இ. டி. பொறியியல் கல்லூரி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் தலைவர் முஹம்மது யூனூஸ், திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தார்கள்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *