தமிழகத்தில் 4 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடக்கிறது..! இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் இந்தியா முழுதும் இன்று போர் ஒத்திகை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு..! இந்தியா முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறுகிறது..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், இந்தியா முழுதும் இன்று (புதன்கிழமை) போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் புதன்கிழமை (இன்று) போர்க்கால ஒத்திகை நடக்கிறது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை அதிகாரிகளுடன், பிரதமர் மோடியும் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங்கை அழைத்து பேசினார். ராணுவத்தின் உத்தேச தாக்குதல் திட்டம் குறித்து பிரதமரிடம் அவர் விளக்கினார்.
இந்த நிலையில், இந்தியா முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அவசர உத்தரவு பிறப்பித்தது. போர் நடக்கும்போது பொது மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று பயிற்சி அளிப்பதே போர் ஒத்திகை. இது போன்ற பயிற்சி, 1971ல் நடந்த இந்தியா – பாக்., போரின்போது கடைசியாக நடத்தப்பட்டது.
உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது : வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிக்க விடுதல்: எதிரி விமானங்கள் குண்டு வீச வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலி கேட்டதும், பொதுமக்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் எல்லா வேலையையும் விட்டுவிட்டு, உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிய வேண்டும். சாலைகள், வீதிகளில் இருந்தால் சட்டென கீழே படுக்க வேண்டும். இந்த சைரன்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை மாநில அரசுகள் முதலில் சோதிக்க வேண்டும்.
தாக்குதல் நடத்தப்பட்டால் பாதுகாத்து கொள்வது குறித்து, பொது மக்கள், மாணவர்களுக்கு பயிற்சி: தற்போதைய தலைமுறையினர் போரை பார்த்தது இல்லை என்பதால், இது மிகவும் முக்கியமானது. எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகள் வருவது தெரிந்ததும், மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக தெரு விளக்குகள் அணைக்கப்படும். வீடுகளில் மின் விளக்குகள் எரிந்தால், அது வெளியே தெரியாமல் இருக்க கதவு, ஜன்னல்களை மூட வேண்டும். கண்ணாடி ஜன்னலாக இருந்தால் கருப்பு தாள் அல்லது துணியால் மறைக்க வேண்டும். மின் விளக்குகளை அப்போது அணைத்து விடுவது உத்தமம்.
விபத்து தடுப்பு நடவடிக்கைகள்: திடீர் அலெர்ட் வந்தால், உடனே வீட்டுக்கு போய் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் வரும். அதனால் ஏற்படும் அவசரத்தில், வாகனங்கள் மோதி விபத்து நேர்வது சகஜம். அப்போது என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதற்கான பயிற்சி இது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும்.
முக்கிய ஆலைகள், ஆயுத கிடங்குகளை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடு: போரில் எதிரிகள் வைக்கும் முதல் குறி, எதிரியின் ஆயுத தளங்களாக இருக்கும். அடுத்தது, மின் உற்பத்தி நிலையம், டெலிவிஷன் ஸ்டேஷன், டெலிபோன் எக்சேஞ்ச் போன்ற இடங்களாக இருக்கும். இவை எந்த இடத்தில் உள்ளன என்பதை எதிரிகள் ஏற்கனவே அறிந்திருப்பர். ஆனால், குண்டு வீசும் விமானங்களோ, ஏவுகணைகளோ வரும்போது, அவர்கள் அறிந்திருந்த இடத்தில் இந்த நிலையங்கள் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி குழப்புவதற்காக, அந்த ஆலைகள் அல்லது அமைப்புகளை காடு, மரங்கள், செடி, கொடி போன்ற துணி அல்லது தார்பாய்கள் போர்த்தி மறைக்க வேண்டும்.
என்ன தான் உஷாராக இருந்தாலும், அதையெல்லாம் மீறி சில இடங்கள் நேரடியாக தாக்கப்பட்டு, பொதுமக்கள் காயம் அடைய வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில், அந்த இடங்களில் இருந்து, இறந்தவர்களையும் காயம் அடைந்தவர்களையும் காலதாமதம் இல்லாமல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது எப்படி என்பதற்கான பயிற்சி இது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், இந்தியா தழுவிய போர்க்கால ஒத்திகையை இன்று (மே 7) நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த போர் ஒத்திகை எங்கெல்லாம் நடைபெறும் என்பது குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைசகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியா முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், தமிழகத்தில் சென்னை இடம் பெற்றுள்ளது. ஐதரபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ (நகர்புறம்), கொச்சின், திருவனந்தபுரம், பாண்டிசேரி உள்ளிட்ட இடங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 35 மாநிலங்களில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது. சென்னயில் கல்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந் நிலையில், தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது, பதற்றமான சூழலில் மக்களை எப்படி வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்படும். 54 ஆண்டுகள் கழித்து(இதற்கு முன்னர் 1971ல் நடந்தது) இந்தியாவில் இன்று (மே 7) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)