உலகம்

இந்திய தாக்குதல்களில் 8 பாகிஸ்தானியர் பலி..! 35 பேர் காயம்..!

இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக  பொதுமக்கள் 8 பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான்  தெரிவித்துள்ளது.

35 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஒபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இலக்குகளை குறிவைத்து, இந்திய இராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவர் என்று குறிப்பிட்டு, ஜெய்ஹிந்த் என்றும் இந்திய ராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூளுரை 

காஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி கூறியிருப்பதாவது, 

சமீபத்தில், எதிரியான இந்தியா மூன்று இடங்களில் கோழைத்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இந்த கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான தாக்குதல் இந்தியாவின் வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டது. அவர்கள் பாகிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருப்பதாவது, 

தந்திரமான எதிரி பாகிஸ்தானில் ஐந்து இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தியா திணித்த இந்த போர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு. அதற்கு தகுந்த பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த நாடும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு துணை நிற்கிறது. பாகிஸ்தானுக்கும், நம் ராணுவத்துக்கும் எதிரியை எப்படி கையாள்வது என்று தெரியும். எதிரியின் தீய நோக்கங்களை ஒருபோதும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *