8287 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குட்டித் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்.
வாக்களிப்பு நிலையத்திலேயே வெற்றியாளர் அறிவிப்பு.இரவு 10.00 மணிக்குள் முதலாவது தேர்தல் முடிவு.
குட்டித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகியது.
பிற்பகல் 4.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவுக்கு வரவுள்ளது. 25 தேர்தல் மாவட்டங்களில் 339 உள்ளூராட்சி சபைகளுக்காக 4877 வட்டாரங்களில் இத் தேர்தல் நடத்தப்படுகின்றது. இதன் மூலம் 28 மா நகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகளுக்காக 8287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
49 அரசியல் கட்சிகள், 257 சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 75,589 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
17,156,338 பேர் இத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை 5783 நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வாக்களிப்பு நிறைவு பெற்றதும் வட்டாரத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கெண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் பின் அந்த வட்டாரத்தின் வெற்றியாளர் யார் என அங்கேயே அறிவிக்கப்படும். இதன் பிறகு இந்த விபரங்கள் தேர்தல் மத்திய நிலையங்களுக்குக் கையளிக்கப்படும்.
இதன்படி மொத்த முடிவுகளை அறிவிக்கும் நடவடிக்கைகளை தேர்தல் மத்திய நிலையங்கள் மேற்கொள்ளும். முதலாவது தேர்தல் முடிவை இரவு 10.00 மணிக்குள் வெளியிட முடியுமென தேர்தல் ஆணையாளர் நம்பிக்கை தெரிவித்தார்.