உள்நாடு

ஜனநாயக ரீதியானதும், அமைதியான முறையிலுமான தேர்தலுக்காக நாமனைவரும் கைகோர்ப்போம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும், நீதி நியாயமாகவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக அமையட்டும். சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க சந்தர்ப்பம் கிட்டட்டும். கிராமங்களினதும் நகரங்களினதும் அதிகாரத்தை யாருக்கு வழங்குவது என்பதை தீர்மானிக்க இந்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. மக்கள் இதனை சரியாக பயன்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பிறகு, கிராமங்களைக் கட்டியெழுப்பி, நகரங்களைக் கட்டியெழுப்பி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் செய்தியை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். தீர்மானம் எடுக்க வேண்டியது மக்களே. எனவே, சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனநாயகம் மிக்க தேர்தலுக்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். மக்கள் எடுக்கும் முடிவுக்கு சகலரும் மதிப்பளிக்க வேண்டும். தேர்தல் சட்டங்களை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். இந்த ஜனநாயகத்தை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2025 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (06) காலை ராஜகிரிய, கொடுவேகொட விவேகாராம விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *