உள்நாடு

ஹரீஸ் எம்.பியின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது..!

கல்முனை பிராந்திய மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த நீச்சல் தடாக குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாக நிர்மாணப்பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது. அதன் பூர்வாங்க நிர்மாண வேலைகளை பார்வையிடும் முகமாக 2025.04.08 ம் திகதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் என பல சவால்களை கடந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பல்வேறு கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 110 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் தடாகத்தினை விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து கல்முனை மாநகர சபை கையேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கவும் மேலும் இந்த நீச்சல் தடாக பராமரிப்பு, மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் அதன்போது கலந்துரையாடியிருந்தார்.

அதனையடுத்து இன்று (30.04.2025) உத்தியோகபூர்வமாக உரிய அதிகாரிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இளைஞர் விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். ராபீ, பொறியியலாளர் ஏ.ஜே.எம். ஜௌஸி மற்றும்  மாநகர சபை உத்தியோகத்தர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *