ஜனாதிபதி அநுர வியட்நாம் பயணமாகிறார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வியட்நாம் பயணம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மே 4 முதல் 6ஆம் திகதிவரை வியட்நாமுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல சிரேஷ்ட பிரமுகர்களைச் சந்திக்க உள்ளதாக என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதுடன் அங்கு ஜனாதிபதி ஒரு விசேட உரையை நிகழ்த்த உள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்றும், வணிக சமூகத்துடனும் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த ஆண்டு இராஜதந்திர உறவுகளின் 55ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் என்பதால், வியட்நாம் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரசு அதிகாரிகள் குழுவும் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.